தமிழகம் இருளில் மூழ்கிவிடும் போதிய நிலக்கரி கையிருப்பில் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலர் அறிக்கையும், பேட்டியும் அளித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் பி.தங்கமணி அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.

 

செல்லும் போது நமது ஏசியா நெட் செய்தியாளரிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் அரசியலுக்காக தேவையற்ற செய்திகளை பரப்பி மக்களிடம் பீதியை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன், திமுக ஆட்சியில் இருட்டுக்கு தள்ளப்பட்ட தமிழகம் அம்மாவின் பெரும் முயற்சிகளால் மின் மிகை மாநிலமாக மாறியது. அதை நாங்கள் எப்போதும் தக்க வைப்போம். என்றார். 

தனியாரிடமிருந்து 2830 MW மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. ஆனால், 2000 MW மின்சாரம் தான் கிடைக்கிறது. அந்த சிறு வித்தியாசத்தைக்கூட விரைவில் சீர் செய்துவிடுவோம், அதனால் தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்றார். 

டெல்லி சென்றுள்ள அமைச்சர் தங்கமணி மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் ஆகியோரை சந்திக்கிறார். தற்போது தூத்துக்குடியில் 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. 

வடசென்னையில் 4 நாட்களுக்கான நிலக்கரியும், மேட்டூரில் 3 நாட்களுக்கான நிலக்கரியும் கையிருப்பில் உள்ளது. மேலும் நல்ல மழை பெய்து வருவதால் மின் உற்பத்தியே குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூரில் 420 மெகாவாட் மின்உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. எனவே 13 நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. மேலும் 15 நாட்களுக்காக நிலக்கரிக்கான எப்போதும் கையிருப்பில் வைக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.