கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து, மத்திய உள்துறை அமைச்சகம் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். பின்னர், அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது, அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் மீது, பாஸ் போர்ட் சட்டம் 10 (B) பிரிவின் கீழ், தேடப்படும் நபராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு அவர், சரிவர ஒத்துழைப்பு தரவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், கார்த்தி சிதம்பரம், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்கில் இருந்து விலகுவதற்காக, வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல இருப்பதாகவும், அதனால் அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.

இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் கூறுகையில், இது அரசியல் நோக்கத்தில் பழி வாங்கும் செயல் என்றார். தற்போது, அவர் சென்னையில் உள்ளாரா என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலரிடம் கேட்டபோது, கார்த்தி சிதம்பரம் சென்னையில் கட்சி பணிகளை கவனித்து வருகிறார். அவர், வெளிநாடு செல்லவில்லை என தெரிவித்தனர்.