தமிழகத்தின் மின் உற்பத்திக்கு தேவையான நிலகரியை மத்திய அரசு தரவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மின் உற்பத்திக்கு தேவையான நிலகரியை மத்திய அரசு தரவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள அரசுக்கு சொந்தமான அனல்மின் நிலையத்தில் ஐந்து அலகுகள் மூலம் தலா ஒரு அலகில் 210 மெகாவாட் மின்சாரம் என ஐந்து அலகுகள் மூலம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த வாரம் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ஒரே நாளில் 5 அலகுகளும் நிறுத்தப்பட்டு மின் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து கப்பல்கள் மூலம் உடனடியாக நிலக்கரி கொண்டு வரப்பட்டு ஐந்து அலகுகளும் படிப்படியாக ஓடத் துவங்கின. கப்பலில் கொண்டுவரப்பட்ட நிலக்கரி ஒரு வாரத்திற்கு மட்டுமே உற்பத்திக்கு போதுமானதாக உள்ளது என்று கூறப்பட்டது. இந்நிலையில் இன்று நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 3 மற்றும் 4 அலகுள் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 410 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

1,2,5 ஆகிய யூனிட்களில் தலா 210 மெகாவாட் வீதம் 630 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தற்பொழுது உற்பத்தி செய்யப்படுகிறது. இதனிடையே தமிழகத்தின் மின் உற்பத்திக்கு 72,000 டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில் மத்திய அரசு 48,000 முதல் 50,000 டன் நிலக்கரி மட்டுமே தருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டில் தமிழகத்திற்கு தேவையான 17,300 மெகா வாட் மின்சாரம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் புதிய மின் திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை. கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களையும் 10 ஆண்டுகளாக அதிமுக கிடப்பில் போட்டது.

தமிழகத்தின் மின் உற்பத்திக்கு 72,000 டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில் மத்திய அரசு 48,000 முதல் 50,000 டன் நிலக்கரி மட்டுமே தருகிறது. நிலக்கரி பற்றாக்குறையை போக்குவதற்காக முதல்வரின் வழிகாட்டுதலின் படி 4,80,000 டன் இறக்குமதி செய்வதற்காக ஒப்பந்தம் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. அந்த ஒப்பந்த புள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு அந்த டெண்டர் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். எனவே இந்த ஆண்டை பொறுத்தவரை நம்முடைய மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக பல்வேறு ஒப்பந்தலும் முதல்வரின் வழிகாட்டுதலின் படி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு மின்தேவையை பூர்த்தி செய்வதற்காக வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்தாலும் கூட அடுத்த ஆண்டு நம்முடைய தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவில் நம்முடைய சொந்த உற்பத்தியை அதிகரிப்பதற்கு மின்சாரத்துறை சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.
