திருச்சி உள்ளிட்ட நாட்டின் விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.மேலும் கேரள அரசைப்போல் இத்திட்டத்தை தமிழக அரசும் எதிர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து அக்கட்சி தெரிவித்துள்ளதாவது:- 

நாட்டில் உள்ள 100க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள விமான போக்குவரத்துத் துறை ஆணையம் (Airports Authority of India-AAI) வசம் இருந்து வருகிறது. இந்நிலையில் விமான நிலையங்களின் தரத்தை உயர்த்தும் நடவடிக்கை என்ற பெயரில், விமான நிலையங்களை பராமரிக்கும் முழு பொறுப்பையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக அகமதாபாத், லக்னோ மற்றும் மங்களூரு ஆகிய 3 விமான நிலையங்களை பராமரிக்க, நிர்வகிக்க தனியார் மயமாக்கல் திட்டத்தின்படி அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

இதன்மூலம் அடுத்த 50 ஆண்டுகளுக்கு அந்த விமான நிலையங்களின் நிர்வாகம் மற்றும் பராமரிக்கும் உரிமையை அதானி நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். இந்நிலையில், தற்போது திருச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட 9 விமான நிலையங்களை தனியார் மயமாக்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், குவஹாத்தி உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு  ஏற்கனவே ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டு அதனடிப்படையில் அதானி நிறுவனத்துக்கு வழங்க கையெழுத்தி டப்பட்டுள்ளது. ஆனால், திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார் மயமாக்கி அதானி நிறுவனத்துக்கு வழங்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு தர இயலாது என கேரள முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த அதானி நிறுவனம் ஏற்கனவே சோலார் மின் உற்பத்தி மற்றும் விநியோகம், காற்றாலை மின் உற்பத்தி மற்றும் விநியோகம், துறைமுக பராமரிப்பு போன்ற துறைகளில் நுழைந்துவிட்டது. தற்போது விமான பராமரிப்பிலும் காலடி எடுத்துவைத்துள்ளது. 

விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தின் கீழ் கிடைக்கும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை, விமான நிலையத்தை நிர்வகிக்கும் நிறுவனம் விமான போக்குவரத்துத் துறை ஆணையத்திற்கு செலுத்தும் என கூறப்படுகிறது. அதாவது, நான் உமி கொண்டு வர்றேன், நீ நெல் கொண்டு வா, ரெண்டு பேரும் சேர்ந்து ஊதி ஊதி தின்போம் என்பது போல் உள்ளது மோடி அரசின் இந்த நடவடிக்கை. இந்த விவகாரத்தில் திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் முடிவுக்கு கேரள முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேரள முதல்வரைப் போன்று தமிழக முதல்வர் அவர்களும் திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை எதிர்க்க வேண்டும். ஒப்பந்தபுள்ளி கோரப்படுவதற்கு முன்பாகவே மத்திய அரசின் தனியார் மயமாக்கும் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். 

நிர்வாகத் திறமையின்மையின் காரணமாக நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள், பொதுச்சொத்துக்களை ஏலம் விட்டு, நாட்டின் சொத்துக்களை கார்ப்பரேட் மயமாக்கும் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு,  விமான நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியார் மயமாக்குவதன் மூலம் சர்வதேச அளவிலான பல்வேறு முறைகேடுகள் நடைபெறவும் வழிவகுக்கிறது. மத்திய அரசின் இம்முடிவு கண்டிக்கத்தக்கது. ஆகவே, நாட்டிற்கு பெரும் கேடு விளைவிக்கும் வகையிலான இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட்டு, விமான நிலையங்கள் நிர்வகிப்பு, பராமரிப்பு ஆகியவற்றை அரசே திறம்பட மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.