234 பேர் பாதிக்கப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு 966 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்துக்கு 510 கோடி தானா? இதிலிருந்து தெரிவது, மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறை மட்டும்தான்; கொரோனா அரசியல்தான்! என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘’மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து தமிழகத்தில் தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆனால் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களை விட தமிழகத்துக்குக் குறைவான நிதியை ஒதுக்கியிருப்பதற்கு என்ன காரணம்?

பாரதீய ஜனதாக் கட்சி ஆளாத மாநிலம் என்பது காரணமா? 234 பேர் பாதிக்கப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு 966 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்துக்கு 510 கோடி தானா? மற்ற மாநிலத்துக்கு ஏன் அதிக நிதி ஒதுக்கினீர்கள் என்று கேட்கவில்லை; தமிழகத்துக்கு ஏன் குறைவாக ஒதுக்குகிறீர்கள் என்று தான் கேட்க விரும்புகிறேன்.

தமிழக அரசு முதலில் 9 ஆயிரம் கோடி ரூபாயும், பின்னர் 3200 கோடி ரூபாயும் மத்திய அரசிடம் கேட்டுள்ளது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து வந்திருப்பது மொத்தமே 510 கோடி ரூபாய் என்றால், இதிலிருந்து தெரிவது, மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறை மட்டும்தான்; கொரோனா அரசியல்தான்!

இந்த நிலையில் இன்னொரு பின்னடைவாக, நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகாலத்துக்கு கிடையாது என்று அறிவித்துள்ளார்கள். இதன்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரமும் உரிமையும் ஒரே நாளில் பறிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை இயற்றுபவர்கள் நிலைமையே இதுதானா?

நாடாளுமன்ற உறுப்பினர் நிதி என்பது அவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதிச்சலுகை அல்ல; அது நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூலமாக மக்களின் தேவை அறிந்து, அதை நிறைவு செய்திடும் திட்டங்களுக்கான தொகைதான்.

ஓர் அரசு நிறைவேற்றும் திட்டம் என்பது, நாடு முழுமைக்குமானதாக, மாநிலம் முழுமைக்குமானதாக, இரண்டு மூன்று மாநிலங்களை ஒன்றிணைப்பதாக அமையும். அப்படி அமையும் போது தொகுதி அளவில், வட்டார அளவில் கவனிக்க வேண்டிய ஆக்கப்பூர்வமான பல காரியங்கள் விட்டுப் போகும். சில பகுதிகள், யாராலும் கவனிக்கப்படாமலேயே விடுபட்டுப் போய்விடும்; மக்களின் அதிருப்தி வளரும். அப்படி விடுபட்டுப் போகும் வட்டார - தொகுதி வளர்ச்சிக்குத் தான் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி செலவு செய்யப்படுகிறது. இதை நிறுத்துவதன் மூலமாக சாமான்ய மக்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு, அவை நிறைவேறுவது தடுக்கப்படும்; வட்டார விருப்பங்கள் பாதிக்கப்படும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொகுதிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கி அத்தொகுதி மக்களின் நல்வாழ்வுக்கு உதவி செய்யுங்கள் என்று சொல்வதை விடுத்து, இருந்த நிதியையும் பறிப்பது என்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை நெருக்கடியில் நிறுத்துவதாகும்.

இதனை ஜனநாயக வழிமுறை என ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, தொகுதி மேம்பாட்டு நிதியை மீண்டும் வழங்க வேண்டும் என்பதே நியாயமானதாகும். சமூகம், பொருளாதாரம், சுகாதாரம் ஆகிய பிரச்சினைகள் உயிரிழப்புகளில் கொண்டுபோய் விடுவதாக மாறிவரும் சோகமான சூழ்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணர்வுகளையும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொண்டு, அனைவரும் ஏற்கத் தகுந்த காரியங்களில் மத்திய அரசு ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்; ஈடுபடும் என்று நம்புகிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.