காவிரி இறுதி தீர்ப்பில், தமிழகத்துக்கான காவிரி நீர் குறைக்கப்பட்டாலும் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான் தமிழக மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்தது.

ஆனால், ஏற்கனவே இதுபோல பலமுறை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. ஆனால், இதுதான் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு என்பதால் இந்த முறை கண்டிப்பாக அமைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழகம் உள்ளது.

எனினும் இதுதொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளும் இணைந்து டெல்லி சென்று பிரதமரை வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர். தமிழகத்திற்கு வந்த பிரதமரிடம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார். ஆனால் அதற்கு பிரதமர் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

இதற்கிடையே வரும் 7ம் தேதி கர்நாடக அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி ஆலோசனை நடத்தப்பட உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து கட்சி பிரதிநிதிகள் இணைந்து பிரதமரை விரைந்து சந்தித்து வலியுறுத்த வேண்டும். இல்லையென்றால் காத்திருந்து ஏமாறக்கூடிய சூழல்தான் உருவாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்திற்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சநீதிமன்றம் 6 வார காலம் அவகாசம் கொடுத்திருந்த நிலையில், கூடுதல் கால அவகாசம் கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்பதே மத்திய அரசின் நோக்கமாகவும் இருக்கக்கூடும் என்பதை வெளிப்படுத்தும் விதமான தகவலும் உள்ளது. அதாவது நாடு முழுவதும் பல்வேறு நதிநீர் பங்கீடு விவகாரங்கள் உள்ளதால் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக வாரியம் அமைத்தால் கால விரயம் ஆவதால், ஒட்டுமொத்தமாக நிரந்தர நதிநீர் தீர்ப்பாயம் அல்லது நிரந்தர நதிநீர் பங்கீட்டு வாரியம் அமைக்க மத்திய அரசு பரிசீலித்துவருகிறது. இதுதொடர்பான ஒரு மசோதா ஒன்று கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

தற்போது அந்த மசோதாவை தூசி தட்ட திட்டமிட்டுள்ள மத்திய அரசு, அதற்காகத்தான் உச்சநீதிமன்றத்தை நாடி கால அவகாசம் கோர உள்ளதாக கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்பதில் மட்டும் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்பதை உணர முடிகிறது என அரசியல் விமர்சகர்களும் தமிழக விவசாயிகளும் அதிருப்தியையும் ஆதங்கத்தையும் தெரிவிக்கின்றனர்.