central government ignore tamilnadu heritage symbols said court
தமிழக புராதன சின்னங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற புகார் சரியானதுதான் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகளை மீண்டும் தொடங்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி எழுத்தாளர் காமராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தமிழக புராதன சின்னங்களை மத்திய அரசு புறக்கணிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, புராதன சின்னங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டு சரியே. புராதன சின்னங்களை பாதுகாக்க தமிழகத்தில் மட்டுமே முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. பாரம்பரிய சின்னங்கள் பாதுகாக்க வேண்டும். ஆனால் அவற்றை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. நமது புராதன சின்னங்களின் பெருமையும் அவற்றின் பாரம்பரியத்தையும் அறிந்துகொள்ள வெளிநாட்டினர் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், நாம் அவற்றை கண்டுகொள்வதில்லை.

தமிழகத்தில் புராதன சின்னங்கள் எத்தனை உள்ளன? எத்தனை இடங்களில் அகழாய்வு பணிகள் நடக்கின்றன? எத்தனை இடங்களில் இதுவரை அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளன? முடிந்த அகழாய்வு தொடர்பாக எத்தனை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன? எந்த காலக்கட்டத்தில் அந்த ஆய்வுகள் நடந்தன? என சரமாரியாக நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் இதுதொடர்பாக தொல்லியல் துறை நாளை மறுநாள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
