மக்களை திசை திருப்ப இந்தி மொழி திணிப்பு வேலைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்னணன் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற குழு இந்தி மொழி பயன்பாடு தொடர்பான பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்பித்தது.

அதில் குடியரசு தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் இந்தியில் மட்டுமே பேசவோ மசோதாக்களை தாக்கல் செய்யவோ வேண்டும் என தெரிவிக்கபட்டிருந்தது.

இதற்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்னணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், இந்தியை கட்டாயமாக திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும், இந்தியை திணிக்கும் முயற்சி கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் மொழிப்போர் மூண்டது போன்ற சூழ்நிலையை மத்திய அரசு ஏற்படுத்தக் கூடாது எனவும், எந்தவொரு மொழியையும் நிர்ப்பந்தமாக திணிப்பது எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மோடி அரசு ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் சமஸ்கிருத மொழியை திணிக்க முயல்கிறது. மறுபுறத்தில் இந்தி மொழி திணிப்புக்கு அனைத்து முயற்சிகளும் செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களை திசை திருப்ப இந்தி மொழி திணிப்பு வேலைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.