உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த என்ன மாதிரியான திட்டங்களை செயல்படுத்தலாம் என அறிக்கை தாக்கல் செய்யுமாறு 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

6 வார காலத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை பிரதமரிடம் அளிக்க தமிழக அரசு சார்பில் நேரம் கேட்கப்பட்டது. ஆனால் பிரதமர் நேரம் ஒதுக்காததால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசு சார்பில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக எம்பிக்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டுவருவதோடு, நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டங்களும் நடத்தினர்.

இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து விவாதிக்க தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. 

மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக்கூட்டத்தில், மத்திய நீர்வளத்துறை செயலர்,  தமிழக அரசு சார்பில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் பொதுப்பணித்துறை முதன்மை செயலர் பிரபாகர் ஆகியோர் கலந்துகொண்டனர். கர்நாடக அரசு சார்பில் அந்த மாநில தலைமை செயலாளரும் கலந்துகொண்டார்.

இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள், வழிமுறைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியத்தை எவ்வாறு அமைக்கலாம் என மாநில அரசுகள் கருத்து கூற வேண்டும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த என்ன மாதிரியான திட்டங்களை செயல்படுத்தலாம் என அறிக்கை தாக்கல் செய்யுமாறு 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.