ஏலச்சீட்டு நடத்தி பல லட்சங்களோடு எஸ்கேப் ஆனவனை பாதிக்கப்பட்டவர்கள் மண்ணள்ளிப் போட்டு சபிப்பார்களே!ன் அதற்கு கொஞ்சமும் குறைவில்லாதது பி.ஜே.பி.யை தம்பிதுரை திட்டிய திட்டுக்களும், சாபங்களும். பெரிய வாத்தியார் பி.ஜே.பி.க்கு இப்படி விமர்சன தண்ணீர் காட்டியதன் மூலம் ‘நான் தம்பிதுரை இல்லடா அண்ணன் துரைடா!’ என்று அவர் முறுக்கிய மீசையில் இன்று ஏதோ ஒட்டிவிட்டது!....அது அது அட மண்ணுங்கோவ்.

அப்படி என்ன நடந்துவிட்டது?.... இன்று அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ஏழு சீட்களை வாங்கிக் கொண்டு எக்கச்சக்க சந்தோஷத்துடன் செட்டிலாகிவிட்டது பா.ம.க. இது குறித்து மிக கடுமையான விமர்சனங்களும், சாபங்களும், சபதங்களும் எழுந்திருக்கும் நிலையில்....நாடாளுமன்ற துணைசபாநாயகரான தம்பிதுரை இன்று கரூரில் இதுபற்றி வாய் திறந்திருக்கிறார் இப்படி... “பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வழியில் வந்திருக்கும் அ.தி.மு.க. மிக வலிமையான கட்சி.” என்றவரை இடைமறித்து, ’ஜெ.,வுக்கு நினைவு மண்டபம் கட்டக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க.வுடன் கூட்டணி வைத்தது சரியா?’ என்று நிருபர்கள் கேட்க, “ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருந்தாலும் கூட, தேர்தல் நேரத்தில் ஒரு எதிரியை வீழ்த்திட ஒருமித்த கருத்துள்ள சிலர் கூடுவதுதான் கூட்டணி. அதைத்தானே எங்கள் இயக்கம் செய்துள்ளது. இந்த கூட்டணியை நான் வரவேற்கிறேன். 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸை கழட்டிவிட்ட தி.மு.க. இப்போது அவர்களுடன் ஒன்று சேர்ந்துள்ளது. என்ன அதற்குள், இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் முடிந்துவிட்டதா? அந்த கூட்டணியை கேளுங்களேன் கேள்வி.” என்றவர் அடுத்து சொன்னதுதான் அடடே பல்டி, அந்தர் பல்டி.... “மத்தியில் அடுத்த ஆட்சியின் போது அ.தி.மு.க. அதில் பங்கேற்கும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் சொன்னது நடக்கும்.” என்றார்.

இதுதான், இதுதான் இப்போது தம்பிதுரைக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. அதாவது, அ.தி.மு.க.வின் கூட்டணியில் பி.ஜே.பி. வரப்போகிறது. அடுத்து மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியில் அ.தி.மு.க. சேரும் என்றால் அது பி.ஜே.பி. ஆட்சி அமைக்கும், அதில் அ.தி.மு.க.வுக்கு மத்திய அமைச்சர்கள் பதவி கிடைக்கும்! என்பதுதானே. 

அப்படியானால் இதுவரையில் பி.ஜே.பி.யை திட்டி வந்த தம்பிதுரை இன்று அந்தர்பல்டி அடித்துவிட்டார், தமிழகத்தில் பி.ஜே.பி.யுடன் தங்கள் கட்சி கூட்டு வைக்கக்கூடாது. தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட பி.ஜே.பி. ஜெயிக்காது! என்றெல்லாம் சபித்து வந்தவர்...இன்று “மத்தியில் பி.ஜே.பி. ஆட்சியமைக்கும், அதில் அ.தி.மு.க. சேரும்.” என்று அர்த்தம் பட பேசியிருப்பதை எந்த குப்பையில் கொண்டுபோய் கொட்டுவது? சரண்டரான தம்பிதுரையின் செயல் என்ன சொல்கிறதென்றால், வரும் தேர்தலில் சீட் கேட்டு பணம் கட்டியிருக்கும் தனக்கு சீட் வேண்டும், அதை கொடுத்தால் இப்படி கூட்டணியை குளிர்வித்து பேசுவேன்! என்று சொல்லாமல் சொல்கிறது. கெரகம்.” என்று கழுவி ஊத்துகிறார்கள் விமர்சகர்கள். என்னத்த சொல்ல?