மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று 05.12.2020  காலை, கழக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அதில் 7 தீர்மானர்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது மிக முக்கியமாக, காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்றும், இத்திட்டத்தையே இரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது அந்த தீர்மானம் பின் வருமாறு: 

காவிரியின் குறுக்கே ‘மேகேதாட்டு’ என்ற இடத்தில் தடுப்பு அணை கட்டுவதற்கு ரூ. 9 ஆயிரம் கோடியை ஒதுக்கி உள்ள கர்நாடக அரசு, இத்திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதற்குத் தீவிரமாக உள்ளது. மேகேதாட்டு அணையின் மூலம் 67.16 டி.எம்.சி. நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு பெங்களூரு நகரக் குடிநீர்த் தேவைக்கும், 400 மெகா வாட் நீர் மின் உற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்தவும் கர்நாடக அரசு திட்டமிட்டு உள்ளது.காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம் 2018, பிப்ரவரியில் அளித்த தீர்ப்பு ஆகியவற்றுக்கு எதிராக காவிரியின் குறுக்கே தடுப்பு அணை அமைப்பதற்கு கர்நாடக மாநிலம் அடாவடியாகச் செயல்பட்டு வருவதை ஏற்கவே முடியாது. 

இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்து மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதியைக் கோரி உள்ளார். இதனைத் தொடர்ந்து 2020, நவம்பர் 18-ஆம் நாள் கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரமேஷ்ஜர்கி ஹோலி, டெல்லியில் மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களைச் சந்தித்து மேகேதாட்டு அணை கட்டுமானத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி தர வலியுறுத்தினார். அவரோடு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் சென்று மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சரிடம் மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வற்புறுத்தி உள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெறுவதால், எடியூரப்பா மற்றும் கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “கர்நாடக மாநில நீர்த் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்போம்,” என்று கூறியுள்ளார். இதன் மூலம் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுமானத் திட்டத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு இசைவு அளித்திட முன்வந்து இருப்பது தெரிகிறது. காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்றும், இத்திட்டத்தையே இரத்து செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.