Asianet News TamilAsianet News Tamil

மக்களின் உயிர் தான் முக்கியம்.. கருணாநிதியின் பிறந்தநாளை வீட்டிலேயே கொண்டாடுங்கள்.. முதல்வர் வேண்டுகோள்..!

ஊரடங்கு காலம் என்பதால் பொதுவெளியில் தலைவர் கலைஞரின் பிறந்தநாள் விழா நிகழ்வு எதுவும் நடத்திட வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Celebrate Karunanidhi birthday at home .. CM Stalin request to the volunteers
Author
Tamil Nadu, First Published May 30, 2021, 10:57 AM IST

ஊரடங்கு காலம் என்பதால் பொதுவெளியில் தலைவர் கலைஞரின் பிறந்தநாள் விழா நிகழ்வு எதுவும் நடத்திட வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்;- ஜூன் 3 - நம் தாய்மொழியாம் தமிழுக்குச் செம்மொழித் தகுதியினைப் பெற்றுத் தந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் பிறந்தநாள். தி.மு.கழகத்தினர்க்கு அது சிறந்த நாள். நவீனத் தமிழ்நாட்டின் நன்மை பயக்கும் உயர்வுக்கெல்லாம்  காரணமான நம் உயிர்நிகர் தலைவர் அவர்களை, அய்யா முத்துவேலரின் வாழ்விணையரான அன்னை அஞ்சுகம் அம்மையார் ஈன்ற நாள். 

Celebrate Karunanidhi birthday at home .. CM Stalin request to the volunteers

அந்த மாபெரும் தலைவர்  இன்று நம்மிடையே இல்லை என்கிற ஏக்கம்  ஒருபுறமிருந்தாலும், அவர் கட்டிக் காத்த இந்த இயக்கம் இன்று தனிப்பெரும்பான்மையுடன் தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறது.  5 முறை - மொத்தம் 19 ஆண்டுகள் தமிழகத்தின் தகுதிமிக்க முதலமைச்சராக இருந்து ஒவ்வொரு முறையும் உயர்தனிச் செம்மொழியாம்  தமிழையும் - உயிரனைய தமிழர்களையும் உயர்த்திய தலைவருக்கு 6வது முறையாக முதலமைச்சராகும் வாய்ப்பு அமையாமல் போனாலும் - 6வது முறையாக தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கும் இன்றைய நிலையில், உடன்பிறப்புகளாம் உங்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்  மகிழ்ச்சியை - மனநிறைவை உங்களில் ஒருவனான நான் நன்கறிவேன். 

Celebrate Karunanidhi birthday at home .. CM Stalin request to the volunteers

கழகத்தினர் மட்டுமல்ல, இந்த ஆட்சி மாற்றத்திற்குக் காரணமான தமிழக மக்களின் நெஞ்சத்திலும் ஒரு நிம்மதி ஏற்பட்டிருக்கிறது. இருண்ட காலத்தை விரட்டியடித்து, சூரியன் உதித்திருப்பதால் நாளைய பொழுதுகள் எல்லாம்  நல்லதாகவே விடியும் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது. அனைவருக்குமான ஆற்றல்மிகு அரசு இது என்பதை அவர்கள் ஒவ்வொரு நாளும் உணர்கிறார்கள். இது தலைவர் கலைஞர் வடித்துத் தந்த வழியில் மக்கள் நலன் காக்கும் அரசு என்பதைக் கழக அரசின் ஒவ்வொரு செயல்பாட்டின் வாயிலாகவும் அறிந்து கொள்கிறார்கள்.

முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சர் பொறுப்பில் இல்லை என்றாலும், அவர்தான் ஆட்சி செய்கிறார் என்பதை, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” எனப் பதவியேற்பு உறுதிமொழி ஏற்ற நான்,  என் உள்ளத்தில்  ஆழப் பதியவைத்துள்ளேன். தலைவர் கலைஞர் அவர்களின் பெயருக்கும் புகழுக்கும் அணிசேர்க்கும் வகையில், இந்தப் பேரிடர் காலத்தில் இணையிலாப் பணியாற்றி, மக்கள் நலன் போற்றிக் காத்திட வேண்டும் என்ற உறுதியுடன் ஒவ்வொரு நாளும் ஊழியம் செய்து வருகின்றேன். நமது அமைச்சர் பெருமக்களும், கழக சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களும்  உறுதுணையாக நிற்கின்றனர். தி.மு.கழகத்தின் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் - கிளைக்கழக நிர்வாகிகள் - செயல் வீரர்கள்  அனைவரும் மக்கள் நலன் காக்கும் பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு அரும்பணியாற்றுகின்றனர். 

Celebrate Karunanidhi birthday at home .. CM Stalin request to the volunteers

மகத்தான வெற்றியையும் மக்களின் நம்பிக்கையையும் பெற்று திமுக ஆட்சி மீண்டும் அமைந்துள்ள நிலையில், இந்த வெற்றிக்கான அரசியல் பாதையை நமக்கு வகுத்தளித்தவரும் - நம் நெஞ்சில் எந்நாளும் நிலைத்திருப்பவருமான தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாட முடியவில்லையே என்ற ஏக்கம் ஒவ்வொரு உடன்பிறப்பின் நெஞ்சிலும் இருக்கத்தானே செய்யும்! கடந்த ஆண்டு நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோதும், இதேபோல கொரோனா கால ஊரடங்கு காரணமாகத் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை மிக எளிய முறையிலேதான்  கொண்டாடினோம். ஓராண்டுக்குள் நிலைமை மாறும் என எதிர்பார்த்தோம். அதனால், கழக ஆட்சி அமைந்த முதல் ஆண்டில் தலைவர் கலைஞரின் பிறந்தநாளை எப்படியெல்லாம் கொண்டாடுவது என்று மனதளவில் நீங்கள் திட்டமிட்டிருப்பீர்கள் என்பதை உங்களில் ஒருவனான என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. 

என் மனதிலும்கூட, தலைவர் கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாள் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான திட்டங்கள் உண்டு. எல்லாவற்றையும் இந்தப் பேரிடர் காலம் ஒத்தி வைத்திருக்கிறது. மக்களின் உயிரைக் காப்பது ஒன்றே நம் முன் உள்ள தலையாய பணி. அதற்காக நம்மை முழுமையாக அர்ப்பணித்துச் செயலாற்றுவதே தலைவர் கலைஞரின் பிறந்தநாள் விழாவுக்கு சிறப்பு சேர்ப்பதாகும். தலைவர் கலைஞர் அவர்கள் இன்று ஆட்சிப்பொறுப்பில் இருந்திருந்தால், இதைத்தான் நம்மிடம் எதிர்பார்த்து  அறிவுறுத்தியிருப்பார். 

Celebrate Karunanidhi birthday at home .. CM Stalin request to the volunteers

ஊரடங்கு காலம் என்பதால் பொதுவெளியில் தலைவர் கலைஞரின் பிறந்தநாள் விழா நிகழ்வு எதுவும் நடத்திட வேண்டாம். கழகத்தை நிறுவிய பேரறிஞர் அண்ணா நமக்கு வழங்கிய முத்தான மூன்று அன்புக் கட்டளைகள், ‘கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு’ ஆகியவையாகும். இந்த மூன்றில் மிக முக்கியமானது, ‘கட்டுப்பாடு’ என்பதைத் தலைவர் கலைஞர் அவர்கள் பல முறை நமக்கு வலியுறுத்தியிருக்கிறார்.  நம் உள்ளமெல்லாம் நீக்கமற நிறைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளில் கட்டுப்பாடு காத்து, அவரவர் இல்லங்களில் கலைஞரின் திருஉருவப் படத்திற்கு மரியாதை செலுத்திக் கொண்டாடுங்கள். அவர்  கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி, ஊரடங்கில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை எதிர்பார்த்திருக்கும் ஏழை - எளிய மக்களுக்கு அவர்களின் இருப்பிடம் சென்று உதவிகளை வழங்கிடுங்கள். 

நலன் காக்கும் உதவிகளைச்  செய்வதற்கேற்ப, அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று, முகக் கவசம் - தனி மனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா  பேரிடர் கால நெறிமுறைகளைச் சரியாகக் கடைப்பிடித்து, எவ்வகையிலும் கூட்டம் சேர்ந்திடாதவாறு கவனமாகச் செயலாற்றுங்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதே பேரறிஞர் அண்ணாவின் தம்பியான முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் விழாவுக்கான செயல்திட்டமாக அமையட்டும். கழக ஆட்சி அமைந்த முதல் ஆண்டில், நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாட இயலவில்லையே என வருந்த வேண்டாம்.

Celebrate Karunanidhi birthday at home .. CM Stalin request to the volunteers

ஐந்தாண்டுகளும் நம் கழக ஆட்சியின் ஆண்டுகள்தான். அதனை அடுத்து  வரும் ஆண்டுகளும் தி.மு.கழகமே ஆட்சி செய்ய வேண்டும் என, தமிழக மக்கள் மனமுவந்து தீர்ப்பளிக்கும் நல்வாய்ப்பு அமைந்திடத்தான் போகிறது. எனவே, பேரிடர் கால நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, தலைவர் கலைஞர் பிறந்தநாளை அமைதியாக - எளிமையாகக் கொண்டாடுவோம். மக்கள் நலன் காத்து - பேரிடரை  வெல்வோம். அடுத்து வரும் ஆண்டுகளில், பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்ற அவரது  அருமைத் தம்பியாம் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளைப் பெருமகிழ்ச்சியுடன் விழா எடுத்துக்  கொண்டாடுவோம்! என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios