ரெயில்வேக்கு சொந்தமான ஐ.ஆர்.சி.டி.சி. ஓட்டல்களை பராமரிக்க தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடர்பட்ட வழக்கில் முன்னாள் ரெயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், அவரின் மகன்தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு சி.பி.ஐ. நேற்று சம்மன் அனுப்பியது.

டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் வரும் 11ந்தேதி  இருவரும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓட்டல் பராமரிப்பு

ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே துறை அமைச்சராக இருந்தபோது, ஐ.சி.ஆர்.சி.டி.சி. நிறுவனத்துக்கு சொந்தமான இரு ஓட்டல்களை பராமரிக்க பி.என்.ஆர் ராஞ்சி, பி.என்.ஆர். பூரி ஆகிய தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கினார்.  இந்த நிறுவனங்களை வினய், விஜய்கோச்சார் நிர்வகித்தனர்.

3 ஏக்கர் நிலம்

இந்த ஒப்பந்தத்தை இவர்களுக்கு வழங்குவதற்காக இவர்களிடம் இருந்து 3 ஏக்கர் நிலத்தை பினாமி நிறுவனம் மூலம் லாலுபிரசாத் யாதவ்  பெற்றார் என்று சி.பி.ஐ. குற்றச்சாட்டு கூறுகிறது.

வழக்குப்பதிவு

தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டார் என்று லாலு பிரசாத்யாதவ் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், அவரின் மனைவி ராப்ரிதேவி, அவரின் மகன் தேஜஸ்வி, முன்னாள் மத்திய அமைச்சர் பிரேம் சந்த்குப்தாவின் மனைவி சரளா குப்தா ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் விஜய் கோச்சார், வினய் கோச்சார் ஆகியோர் மீதும் சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்துள்ளனர்.