ஐ.என்.எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான சிபிஐயின் பிடி இறுகுகிறது. 

ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கு சட்டவிரோதமாக அந்நிய முதலீட்டை பெற்றுதருவதற்காக அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்த சிபிஐ, கடந்த பிப்ரவரி 28ம் தேதி கார்த்தி சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியிலிருந்து கார்த்தி சிதம்பரத்தை மும்பைக்கு அழைத்து வந்துள்ள சிபிஐ அதிகாரிகள், மும்பை பைகுல்லா சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி முன் நிறுத்தி நேருக்கு நேர் கார்த்தி சிதம்பரத்தை விசாரிக்க உள்ளனர்.

இதுதொடர்பாக தெரிவித்த சிபிஐ அதிகாரிகள், கார்த்தி சிதம்பரத்தை மும்பைக்கு விசாரணைக்காக அழைத்து வந்துள்ளோம். இந்த வழக்கில் முக்கியத் திருப்பமாக ஷீனா போரா வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோரின் வாக்குமூலம் அமைந்தது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர்களான இருவரும் அன்னிய முதலீடு தொடர்பாக அரசு ஒப்புதல் பெறுவது குறித்து 2007-ம் ஆண்டு நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை நார்த் பிளாக் அலுவலகத்தில் சந்தித்துள்ளனர். அப்போது அவர் தனது மகனின் தொழிலுக்கு உதவுமாறு கோரியுள்ளார். அதன்படி, கார்த்தி சிதம்பரத்தை இருவரும் சந்தித்துப் பேசியபோது, அவர் 10லட்சம் அமெரிக்க டாலர் லஞ்சம் கேட்டதாக இந்திராணி முகர்ஜி மாஜிஸ்திரேட் முன் கடந்த மாதம் 28-ம் தேதி அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நடத்தப்பட்ட பேச்சுக்குப் பின் 7 லட்சம் அமெரிக்க டாலர் லஞ்சமாக கொடுத்ததாக இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.

ஆதலால், மும்பை பைகுல்லா சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி முன் தனித்தியாக நேருக்கு நேர் கார்த்தி சிதம்பரத்தை நிறுத்தி விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.