துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகள் வாங்கிக் குவித்துள்ளதாகக் கடந்த மார்ச் 10ஆம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பிய புகார் மனுவில், தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபை தேர்தலில் போட்டியிடும்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள சொத்துகளின் பட்டியலுக்கும் வருமான வரித் துறையில் செலுத்தியுள்ள சொத்துகளின் விவரங்களிலும் நிறைய முரண்பாடுகள் உள்ளதாகவும், ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி, மகன்கள், மற்றும் மகளின் பெயரிலும் அவரது சகோதரர், குடும்பத்தினர் பெயரிலும் கோடிக்கணக்கான சொத்துகள் உள்ளன.

இது அந்த மனுவில் குருப்பிட்டுள்ள சொத்து விவரம்;

ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு ஆகியோர் பல நிறுவனங்களில் இயக்குநர்களாக இருந்துள்ளனர். இவர்களது பெயரில் ரூ.200 கோடிக்கு முதலீடு.

அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா நாடுகளில் உள்ள நிறுவனங்களிலும், இந்திய நிறுவனங்களிலும் பன்னீர்செல்வத்தின் வாரிசுகள் முதலீடு செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் 99 ஏக்கர் இடத்தை அரசிடமிருந்து ஒரு நிறுவனம் 99 வருடக் குத்தகைக்கு எடுத்திருந்தது.

குத்தகைக் காலம் 2012ஆம் ஆண்டு முடிந்த பிறகு சந்தை விலையைவிடக் குறைந்த விலைக்கு அதைப் பினாமி மூலம் வாங்கியுள்ளனர். இதன் மதிப்பு தோராயமாக ரூ.140 கோடி. மாந்தோப்பு உள்பட பல்வேறு விளை நிலங்களையும் வாங்கியுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் செண்பகத்தோப்பு பகுதியில் மாந்தோப்பு வாங்கியுள்ளார்.

மணல் காண்டிராக்டர் சேகர் ரெட்டியுடன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரடித்  தொடர்பால் நிறுவனங்களில் குடும்பத்தினர்  முதலீடு செய்துள்ளதோடு, பங்குதாரர்களாகவும் உள்ளனர்.

வருமான வரித் துறை சட்டம், அந்நியச் செலாவணிச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம், பினாமி சட்டம், ஆகிய சட்டங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டிருக்கிறார். 

சேகர் ரெட்டியின் டைரியில் 4 கோடி ரூபாய் பணம் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.