முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தி.மு.க. தொடுத்திருக்கும் ‘டெண்டர் ஊழல்’ வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதுதான் கடந்த சில நாட்களாக ஷாக் டிரெண்டிங்கில் முன்னாடி நிற்கிறது. இந்நிலையில் இந்த வழக்கின் போக்கு, அதன் தீர்ப்பு ஆகியவை பற்றியெல்லாம் பெரும் கற்பனையிலும், அலசல் ஆராய்ச்சியிலும் மூழ்கிவிட்டது தி.மு.க. இன்று ஸ்டாலின் ட்விட்டிய ‘விரைவில் எடப்பாடியின் ஊழல் பாலமும் உடைந்து விழும்’ எனும் பஞ்ச் டயலாக்கெல்லாம் இதன் பின் விளைவுகள்தான். 

சரி, எடப்பாடி வழக்கின் தீர்ப்பாய் தி.மு.க. என்னதான் நினைக்கிறது?...இந்த வழக்கில் ஆர்.எஸ்.பாரதி சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ “ஒரு வழக்கை சி.பி.ஐ. விசாரணை செய்தால்தான் நியாயம் கிடைக்கும் என்று நீதிமன்றம் நினைத்தால், மாநில அரசு உட்பட யாரையும் கேட்காமல் அந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றலாம் என உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளதை கவனிக்க வேண்டும். அதன் அடிப்படையில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. 

பிரச்னைக்குரிய டெண்டர் விவகாரத்தைப் பொறுத்தவரையில் முதல்வருக்கு அதில் தொடர்பு உள்ளது என்பது அழுத்தமான உண்மை. காரணம், டெண்டருக்கான ‘அதிகாரம் அளிக்கும் கமிட்டி’யின் தலைவராக எடப்பாடி பழனிசாமிதான் உள்ளார். அதாவது நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எனும் முறையில் அவர்தான் அதன் தலைவர். ஆக இது ஓ.கே.வா! அடுத்து, உலக வங்கி நிதியில் செயல்படுத்தப்படும் நெடுஞ்சாலைத் துறை திட்டங்களுக்கான டெண்டர் நடைமுறை விதியில் ‘அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நெருங்கிய, தொழில் அல்லது குடும்பத்தொடர்பு இருப்பவர்கள் பங்கேற்க கூடாது.’ என்று விதி உள்ளது. இது மீறப்பட்டுள்ளது. ஆகவே இது மிக துல்லியமான வழக்கு ” என்கிறார். 

இந்த வழக்கின் சூத்ரதாரியான ஆர்.எஸ்.பாரதியோ “இந்த வழக்குக்காக நாங்கள் கொடுத்த ஆதாரங்கள் மிக மிக வலுவானவை அதன் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை கொடுத்தது. சி.பி.ஐ.க்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக உள்ளோம். சி.பி.ஐ. விசாரணையில், நடந்த முறைகேடுகள் அனைத்தும் தடதடவென வந்து விழும். இது போன்ற பழைய வழக்குகளின் தீர்ப்பை அலசியாராய்ந்து பார்க்கையில், எடப்பாடியாருக்கு ஏழு ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என  எதிர்பார்க்கிறோம், நம்புகிறோம். 

எப்படி பார்த்தாலும் எடப்பாடி பழனிசாமி தப்பிக்கவே முடியாது. அவரை நாங்கள் தப்பிக்க விடவும் மாட்டோம்.” என்று அழுத்தம் காட்டியிருக்கிறார். நடப்பவைகளை எல்லாம் சைலண்டாக கவனித்துக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடியாரோ, சட்டரீதியில் தன் தரப்பை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அவருக்கு அ.தி.மு.க. சீனியர்கள் சிலர் தந்திருக்கும் வலுவான அட்வைஸ் “அம்மாவை போல நம் கழக வழக்கறிஞர்களை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.” என்பதுதான்.