CBI inquiry is the best - Duraimurugan

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணையே சிறந்தது என்று எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அமைச்சர்கள் சிலரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டம் ஒன்றில் பேசும்போது, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை, அமைச்சர்களோ கட்சியின் நிர்வாகிகளோ பார்க்கவில்லை என்றும், சசிகலா மட்டுமே ஜெயலலிதாவை பார்த்ததாகவும் கூறினார். 

திண்டுக்கல் சீனிவாசனைத் தொடர்ந்து வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை நாங்கள் பார்க்கவில்லை என்றும், இட்லி சாப்பிட்டதாக அப்போது நாங்கள் கூறியது பொய் என்றும் சொன்னார்.

இந்த நிலையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அப்போலோ மருத்துவமனையில் நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் ஜெயலலிதாவை பார்த்தோம் என்று கூறினார்.

மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்தது குறித்து அமைச்சர்கள் வெவ்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக, எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றார்.

சிபிஐ விசாரணை மூலம் அப்போலோ மற்றும் லண்டன் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரையும் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஜெயலலிதாவை சந்திக்கவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதே உண்மையாக இருக்கும் என்றும் ஐயம் தெரிவித்த துரைமுருகன், திண்டுக்கல் சீனிவாசன் கருத்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறினார். 

அமைச்சர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசுகின்றனர். ஒரு பொய்யை ஒரு நாள் அல்லது ஒரு வருடத்துக்கு மறைக்கலாம். ஆனால் உண்மை வெளியே வந்தே தீரும் என்றும் துரைமுருகன் தெரிவித்தார்.