பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதில் மாநில காங்கிரஸ் அரசுக்கு தொடர்வு இருப்பதாகவும் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டம் என்றும் கர்நாடக பாஜக சார்பில் அத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை, சசிகலாவின் விருந்தினர் மாளிகை ஆகிவிட்டது என்றும், அங்கு அவருக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டு ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இப்பிரச்சனையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே ரகசிய உடன்பாடு உள்ளதாகவும் ராஜ்நாத் சிங்கிடம் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூடுதல் போலீஸ் கமிஷனர் ரவி பெங்களூர் சிறைக்கு சென்று ஆவணங்கள், வருகைப் பதிவேடு போன்ற ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் சசிகலாவுக்கு மட்டுமல்லாமல் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கும் நெருக்கடி ஏற்படும் என தெரிகிறது.