புதிதாக வழங்கப்பட்ட மத்திய தீயணைப்புத்துறை இயக்குநர் பொறுப்பை ஏற்க மறுத்து, பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா.

மத்திய அரசினால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மாவை உச்ச நீதிமன்றம் மீண்டும் சிபிஐ இயக்குநராக மீண்டும் நியமித்தது.  மேலும் தேர்வுக் குழு அலோக் வர்மா குறித்த முடிவை எடுத்துக் கொள்ளட்டும் என்று உச்ச நீதிமன்றம் அரசு தரப்புக்கு முடிவை விட்டுவிட்டது. இந்நிலையில் அலோக் வர்மா நீக்கப்பட்டார். இந்த முடிவு 2:1 என்ற பெரும்பான்மை முடிவின்படி எட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மட்டும் அலோக் வர்மாவை நீக்கும் முடிவை ஏற்கவில்லை. இதற்கிடையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அலோக் வர்மாவின் பதவி பறிக்கப்பட்டது. அவரை தீயணைப்புத் துறை இயக்குநராக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில் அந்த பதவியை ஏற்கமறுத்து பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா. முன்னதாக இது குறித்து அவர் கூறிய, ’’என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. அற்பமான, ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் அடிப்படையில் நீக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. இவை அனைத்தும் என் மீது பகை கொண்ட நபரால் உருவாக்கப்பட்டவை. மீண்டும் இயக்குநர் பொறுப்பு என்னிடம் அளிக்கப்பட்டால், சட்ட விதிகளின்படி அதையே திரும்பச் செய்வேன். உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவும், கடந்த அக்டோபர் 23ல் வெளியான சிவிசி உத்தரவுகள் என் உண்மைக்காக ஆதாரங்கள்’’ என்று குறிப்பிட்டார்.

அலோக் வர்மாவின் பதவிக்காலம் ஜனவரி 31-ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. இன்னும் இருபது நாட்களே உள்ள நிலையில் அவர் ராஜினாமா செய்யப்பட்டுள்ளார்.