தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளால்  உருவாகும் பிரச்னைகளை  பெரிதாய் விமர்சித்து ஸீன் செய்து கொண்டிருக்கிறது தி.மு.க. ஆனால், அவர்கள் கட்சியை சேர்ந்த சிலரே சாராய ஆலைகள் வைத்திருப்பது எத்தனை பேருக்கு தெரியும்? அவர்களில் மிக முக்கியமானவர் ஜெகத்ரட்சகன். அரக்கோணம்  தொகுதியின் லோக்சபா எம்.பி.யாக இருக்கும் இவருக்கு எதிராகத்தான் பழைய வழக்கு ஒன்றை தூசி தட்டி எடுத்து, அதை வைத்து அவரை கைது அளவுக்கு இழுத்துச் செல்ல சி.பி.சி.ஐ.டி. போலீஸ் முடிவு செய்துள்ளது! என்று தகவல்கள் தடதடக்கின்றன. என்ன அந்த பழைய வழக்கு?

இதை விவரிக்கும் விபரமறிந்தோர்...”சென்னை குரோம்பேட்டையில் சுமார் முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக செயல்பட்டு வந்த குரோம் லெதர் ஃபேக்டரி நிலம் சம்பந்தப்பட்டதுதான் இந்த விவகாரம். இந்த ஆலையின் நிர்வாக பொறுப்பில், முக்கிய இடத்தில் இருந்துள்ளார் ஜெகத். பின் சில பிரச்னைகளால் அந்த ஃபேக்டரியை மூடினர். 
இந்த ஆலைக்கு சொந்தமான நிலத்தை, 1982-ல் தமிழ்நாடு நகர்ப்புற நில மீட்பு மற்றும் சீரமைப்புச் சட்டத்தின் கீழ் அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தாராம். பின் அந்த இடத்தினை நீர்வள ஆதாரத்திற்கு பயன்படுத்துவதற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து அடிக்கல்லும் நாட்டினாராம் முதல்வர். 

ஆனால் ஜெகத்ரட்சகன் எம்.பி.யானதும் அந்த அடிக்கல்லை அகற்றிவிட்டு, நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் தனது உறவினர்கள் நாற்பத்து ஓரு பேருக்கு அந்த இடத்தை ஒதுக்கிவிட்டாராம். இது போக ஜெகத்தின் அந்த நாற்பத்து ஓரு உறவினர்களும் அங்கே வேலை பார்த்த ஊழியர்கள் என்று அடையாளப்படுத்திட சில ஆவணங்களும் ரெடி பண்ணப்பட்டதாம். இந்த நிலத்தின் தற்போதைய மார்க்கெட் ரேட் சுமார் முப்பது கோடிகளை தொடுகிறதாம். இந்த நிலையில், இந்த ஆவணங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கிளமண்ட்தாசன் என்பவர் தொடுத்திருக்கும் பொது நல வழக்கில்தான் ஜெகத்திடம் விசாஅரணை நடத்தும் பொருட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாம் சி.பி.சி.ஐ.டி. போலீஸால். 

அந்த நிலம் தொடர்பான பூர்வீக மற்றும் தற்போதைய விபரங்கள் அத்தனையையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து ஆதாரங்களை எடுத்துவிட்டதாம் சி.பி.சி.ஐ.டி. எனவே விசாரணையின் முடிவு ஜெகத்துக்கு எதிராக இருந்தால், அவர் கைதாகவும் வாய்ப்புள்ளதாக அந்த போலீஸ் வட்டாரம் கிசுகிசுக்கிறது. ஏற்கனவே ஜெகத்தின் இலங்கை தொழில் முதலீடுகள் சில சர்ச்சைகளை கிளப்பியிருக்கும் நிலையில், இதுவும் சேர்ந்துள்ளது. எனவே இந்த விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தலையிடவும், நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் கூட வாய்ப்புள்ளது.

அநேகமாக ஜெகத்தின் கைதானது தி.மு.க.வின்  ஆளுமையின் மீது விழும் முதல் அடியாக அமையலாம். வெறும் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களாக இருந்த தி.மு.க.வினர் எப்படி கல்லூரிகள், ஹோட்டல்கள், எஸ்டேட்டுகள் என்று கொழித்துச் செழித்தார்கள்? என்று தோண்டித் துருவி வைத்திருக்கும்  மத்தியரசு வரிசையாக இவர்கள் மீது கைவைக்கும்! இதன் மூலம் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தொடர் கைதுகளின் மூலம் தி.மு.க. மக்கள் மன்றத்தில் அவமானப்பட வாய்ப்புள்ளது.

இந்த விஷயங்கள் ஸ்டாலினின் கவனத்துக்குப் போக, ’அடுத்த முதல்வர் நானே!’ எனும் நம்பிக்கையில் இருந்தவரின் தூக்கம், நிம்மதி கெட்டுவிட்டது.” என்று நிறுத்தினார்கள். 
கஷ்டம்தான்!