கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெளுத்து வாங்கி வருகிறது. தொடக்கத்தில் 2 மாதங்கள் முழுமையான அளவில் மழை பெய்யாத நிலையில் ஆகஸ்டு மாதம் தொடங்கியதில் இருந்து கனமழை கொட்டி வருகிறது. வட கர்நாடகத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன.

மராட்டிய மாநிலத்தில் உள்ள கொய்னா அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பெலகாவியில் ஓடும் கிருஷ்ணா ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 

இதையடுத்து  காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து தற்போது 1.50 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் படிப்படியாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

தற்போது கர்நாடக – தமிழக எல்லையான பிலிகுண்டுவில் 1 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேட்டூருக்கு தற்போது 35 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் வரையிலான காவிரி ஆற்றங்கரையோர பகுதியில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் நீர்தேக்க பகுதியான கோட்டையூரில் தண்டோரா மூலம் வெள்ள எச்சரிக்கை விடுப்பு. காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.