cauvery water issue 10 members party decide to distribute

காவிரி நீரை பகிர்ந்து கொள்வது குறித்து மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவுத் திட்டத்தில் 10 பேர் கொண்ட குழுவை நியமிக்க பரிந்துரை செய்துள்ளது, இந்த குழுவுக்கு முழு அதிகாரம் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் கர்நாடக அரசின் அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிகிறது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு அரசிதழில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதற்கு முன்பாக அந்த அறிக்கையின் நகல்கள் 4 மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டறியும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழுவை பரிந்துரை செய்துள்ளது. 10 பேர் கொண்ட அந்த குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங்கும் இந்த குழுவில் இடம்பெறுவார். காவிரி தொடர்பான அமைப்பின் தலைவர், 5 ஆண்டுகள் பதவியில் நீடிக்க முடியும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. காவிரி நடுவர் மன்றம் கூறிய பணிகளை இந்த அமைப்பு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த அவகாசமே இருப்பதால் இன்றே வரைவு செயல் திட்ட நகல்கள் மாநில அரசுகளிடம் வழங்கப்படும். அதன்பின்னர் மாநில அரசுகள் அதில் உள்ள அம்சங்களால் தங்கள் மாநிலத்திற்கான சாதக பாதகங்கள் குறித்து ஆய்வு செய்து நீதிமன்றத்தில் தெரிவிக்கும். 

உண்மையிலேயே இப்படி ஒரு குழு நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நதிநீர் முறையாக பங்கிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் காவிரி விஷயத்தில் நடுநிலையாக செயல்பட்டு நதி நீரை திறந்துவிடுவதற்கு இந்த குழுவிற்கு முழு அதிகாரம் உள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் 10 பேர் கொண்ட குழுவுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டால், இனி கர்நாடக அரசின் உருட்டல்,மிரட்டல் எதுவும் எடுபடாது என தெரிகிறது. எப்படியோ தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் கிடைத்தால் போதும்…