தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமான காவிரி பிரச்னை தீர வேண்டும் என்றால் தமிழகத்திலும், கர்நாடகாவிலும் பாஜக  ஆட்சிக்கு வர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தென் மாநிலங்களில் பாஜக எந்த மாநிலத்திலும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. இதனால் ஆப்ரேஷன் திராவிடம் என்ற பெயரில் தென் மாநிலங்களைக் குறி வைத்து இங்கு காலூன்ற பாஜக முயற்சி செய்து வருகிறது.

இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை அமைக்க மத்திய பாஜக காலம் தாழ்த்தி வருவதால், தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, இதற்கு முன் திமுக - காங்கிரஸ் கூட்டணி மாநிலம் மற்றும் மத்தியில் இருந்த பொழுது ஏன் இந்த வாரியத்தை அமைக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

அதனால் காங்கிரஸ், திமுக இந்த பிரச்னை குறித்து பேச தகுதி இல்லை என்றும் வைகோ, திருமாவளவன், அன்புமணி ராம்தாஸ் உள்ளிட்டோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த பொழுது அவர்கள் இதற்காக என்ன அழுத்தம் கொடுத்தார்கள் என கேள்வி எழுப்பினார்.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமான காவிரி பிரச்னை தீர வேண்டும் என்றால் தமிழகத்திலும், கர்நாடகாவிலும் பாஜக  ஆட்சிக்கு வர வேண்டும் என்று தமிழிசை செளந்தராஜன் தெரிவித்தார்.