Asianet News TamilAsianet News Tamil

மேகதாது அணை விவகாரம்.. தமிழக அரசு எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.. வைகோ வெளிப்படை..

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்கே ஹல்தர் மத்திய பாஜக அரசின் அறிவுறுத்தலின்பேரில், நேரடியாகவே கர்நாடகத்திற்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படுகின்றார்  என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
 

Cauvery management Commission Chairman Haldar's speech is reprehensible - Vaiko
Author
Tamilnádu, First Published Jun 18, 2022, 12:52 PM IST

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், ஜூன் 17ம் தேதி டெல்லியில் நடைபெறும்; அக்கூட்டத்தில் மேகேதாட்டு அணை குறித்தும் விவாதிக்கப்படும் என்று ஆணையம் கூறி இருந்தது. மேகேதாட்டு அணை பற்றி விவாதம் கூடாது என்று தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்து இருக்கின்றது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் ஜூன் 23ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு இடையே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்கே ஹல்தர், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தலைவர் நிர்மல்குமார் உள்ளிட்ட மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர், மேட்டூர் அணை மற்றும் கல்லணை கால்வாய் பகுதிகளை கடந்த இரு நாட்களாக ஆய்வு செய்தனர். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் எஸ்கே ஹல்தர், ஜூலை 23-ம் தேதி நடைபெறும் ஆணையக் கூட்டத்தில், மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: விபூதி பூசாத கிறிஸ்தவ அமைச்சர் கோவிலுக்குள் வரக்கூடாது.. கொதிக்கும் பாஜக எம்எல்ஏ எம்.ஆர் காந்தி.

அவர், மறைமுகமாக அல்ல, மத்திய பாஜக அரசின் அறிவுறுத்தலின்பேரில், நேரடியாகவே கர்நாடகத்திற்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படுகின்றார் என்பது தெரிகின்றது. காவிரி நடுவர் மன்றம் 5.2.2007ல் வழங்கிய இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றம் 16.2.2018ல் வழங்கிய தீர்ப்பு ஆகியவற்றில், காவிரியின் குறுக்கே தடுப்பு அணை அமைப்பதற்கு தமிழகத்தின் இசைவைப் பெற வேண்டும் என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி என்பது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி காவிரியில் 177.25 டிஎம்சி நீர் கர்நாடகம் திறந்து விடப்படுவதை உறுதி செய்வது மட்டும்தான். அதற்கும்கூட அதிகாரம் எதுவும் அற்ற, பல் இல்லாத ஆணையம் இது என்பதை, நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றோம். காவிரி நீரைத் தடுத்து மேகே தாட்டுவில், ரூபாய் 9 ஆயிரம் கோடியில் 67.14 டிஎம்சி தண்ணீர் கொள்ளளவு கொண்ட அணையைக் கட்டினால், அதன்பிறகு, தமிழகத்திற்கு சொட்டு நீர் கூடக் கிடைக்காது.

மேலும் படிக்க: ஒற்றைத் தலைமை ஏற்க முடியாது.. சமரசரத்தை நிராகரித்த ஓபிஎஸ்.. கலக்கத்தில் இபிஎஸ்.. மீண்டும் தர்ம யுத்தம் 2.0

அதோடு 400 மெகாவாட் நீர்மின் திட்டத்தையும் செயல்படுத்த கர்நாடகம் முனைந்துள்ளது. கர்நாடகத்தின் பாசனப் பரப்பு 9.96 லட்சம் ஹெக்டேரில் இருந்து 38.25 லட்சம் ஹெக்டேராக பரந்து விரிந்து கொண்டே போகின்றது. ஆனால் தமிழகம் கடந்த 48 ஆண்டுகளில் மொத்தம் 15.87 லட்சம் ஹெக்டேர் அளவு சாகுபடிப் பரப்பை இழந்து விட்டது. கர்நாடகம் மாநிலம் பல்வேறு புதிய புதிய பாசனத் திட்டங்களுக்குக் காவிரி நீரைக்கொண்டு போகின்றது என்பதை மறுக்க முடியாது.

மேகேதாட்டு அணை குறித்து விவாதிப்போம் என்று, காவிரிப் படுகைக்கு வந்து எஸ்கே ஹல்தர் கூறி இருப்பது கடும் கண்டத்திற்கு உரியது. தமிழக அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயலாற்றி, கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என்று வைகோ கூறியுள்ளார்.

மேலும் படிக்க: எப்போ போட்டி வந்துச்சோ.. அப்பவே அதிமுக தரைமட்டம் ஆவது உறுதி.. அண்ணா சொன்ன பிளாஷ்பேக் சொல்லி அதிரவிடும் லியோனி

Follow Us:
Download App:
  • android
  • ios