காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜுலை 2 ஆம் தேதி, ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசைன் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில்  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கான தண்ணீரை  திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்ற  உத்தரவின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை அமைப்பது தொடர்பான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் 9 உறுப்பினர்கள் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசைன் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட உள்ளது.

ஆணையம் டெல்லியை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. தமிழகம் சார்பில் பொதுப்பணித் துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் நீர்வளத்துறையின் நிர்வாக செயலாளரான (பொறுப்பு) எஸ்.கே.பிரபாகர், காவிரி மேலாண்மை ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் கர்நாடக அரசின் சார்பில் உறுப்பினர்களின்  பெயர் பரிந்துரை செய்யப்படவில்லை. ஆனால் அதை எதிர்பார்க்காத மத்திய அரசு கர்நாடக அரசுக்கான உறுப்பினரை தன்னிச்சையாக அறிவித்தது.

இந்நிலையில்  கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக இன்று ஆலோசனை மேற்கொண்டார், அதன்பின்னர் கர்நாடக பிரதிநிதிகளை அறிவித்தார். இதற்கிடையே காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

 ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில் டெல்லியில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழ் 4 மாநில அரசுகளுக்கும் நாளை அனுப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

எத்தனையோ ஆண்டுகளாக தமிழக – கர்நாடக மாநிலங்களிடையே நிலவி வந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்ததுபோன்ற சூழல் தற்போது நிலவுகிறது. ஜுலை 2 ஆம் தேதி நடைபெறவுள்ள முதல் கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட ஆணையம் உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.