உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காவிரி வழக்கின் இறுதி தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் என குறிப்பிடாமல், காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தை மேலாண்மை செய்ய திட்டம் வகுக்க வேண்டும் என்றே உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. தீர்ப்பின் அந்த பகுதியை சுட்டிக்காட்டி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி மத்திய அரசும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்திவருகிறது.

இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து டெல்லியில் மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்ட அனைத்து மாநில பிரதிநிதிகளுடனான ஆலோசனையிலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவது கேள்விக்குறியாகவே உள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு கூட்டம் கூட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், இன்று காலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு சிறப்பு கூட்டம் கூடியது.

இதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதற்கு முன்னதாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தீர்மானத்தில் அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து கட்சி உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அதற்குப் பிறகு தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.