Cauvery issue verdict today by supreme court
காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு இறுதித் தீர்ப்பு வழங்குகிறது. இந்த தீர்ப்பில் தமிழகத்தின் உரிமைகள் மீட்டெடுக்கப்படும் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்றும் தமிழக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். அதே நேரத்தில் தமிழகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் கர்நாடகா அதை ஏற்றுக்கொள்ளுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, அங்குள்ள ஹாசன், மாண்டியா மற்றும் மைசூரு மாவட்டங்கள் வழியாக பாய்ந்து, தமிழகத்தில் தர்மபுரி, ஈரோடு, கரூர், திருச்சி, கடலுார், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது.

இந்த காவிரித் தாய் மட்டுமல்லாமல் அதன் கிளை ஆறுகளாலும் கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களும் பயனடைந்து வருகின்றன.
காவிரி நதி நீரைப் பங்கிட்டு கொள்வதில், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே, பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது.

இது தொடர்பாக முடிவு எடுக்க, கடந்த 1990 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம், அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தில் நீண்ட காலமாக நடந்து வந்த இந்த வழக்கில், 2007ல், இறுதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.
ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகள், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
இது தொடர்பான அனைத்து மனுக்களையும், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வந்தது.
இப்பிரச்சனையில் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று, கர்நாடகாவுக்கு பல உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்தும் கர்நாடக அரசு அதை செயல்படுத்தாமல் முரண்டு பிடித்து வருகிறது.

இந்த வழக்கை கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, வாரத்தில் மூன்று நாட்கள் விசாரித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதியன்று, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வெளியாகும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும் அமர்வில் உள்ள நீதிபதி அமிதவ ராய், வரும், மார்ச் 1 ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார். இதனால் அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு தீர்ப்பு வழங்கிவிட வேண்டும் என முடிவு செய்து இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது.
இன்று வழங்கப்படவுள்ள இந்த இமாலயத் தீர்ப்பில் தமிழகத்தின் உரிமை நிச்சயமாக பாதுகாக்கப்படும் என எதிர்பர்க்கப்படுகிறது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தமிழகத்தின் முக்கிய கோரிக்கையும் ஏற்கப்படலாம் என தெரிகிறது.

அதே நேரத்தில் தமிழகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும் அதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு கர்நாடகா அரசுக்குத் தான் உள்ளது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையான காவிரி நதி நீர் பிரச்சனை இந்த தீர்ப்புக்குப் பிறகாவது தீர்க்கப்படுமா ?
