உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரிப்போம் என பாஜகவுக்கு அதிமுக மிரட்டல் விடுத்துள்ளது. இது அரசியல் விமர்கசர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி பிரச்சனையில் இறுதித் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு இதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. கர்நாடகாவில் தேர்தல் நடக்க உள்ளதால் மத்திய அரசு தாமதப்படுத்துவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்பிரச்சனையில் திமுக, அதிமுக  உள்ளிட்ட கட்சிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இதே போன்று நாடாளுமன்றத்தில் கடந்த 8 நாட்களாக அதிமுக உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்து வருவதால், பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் இணைந்து நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் கே.சி.பழனிசாமி, தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் எந்த நடவடிக்கையிலும் பாஜக அரசு  ஈடுபடக்கூடாது என எச்சரித்தார்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இன்னும் 2 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை  அதிமுக ஆதரிக்கும் என தெரிவித்தார்.