ஜாதி என்பது முட்டாள்தானம் ஜாதியை கொண்டு செயல்படும் சம்பவங்கள் முடிவுக்கு வரவேண்டும் என சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி கூறினார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை ஊராட்சி மன்றத் தலைவராக ராஜேஸ்வரி என்பவரும், துணைத்  தலைவராக மோகன் என்பவரும் இருந்து வருகின்றனர். ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி நடைபெற்ற ஊராட்சி மன்றக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியானதை அடுத்து புவனகிரி காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் நடந்த சம்பவம் உண்மைதான் என்றும் தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில் உள்ளாட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் சிந்துஜா ஆகியோர் மீது போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்காத ஊராட்சி ஒன்றிய செயலாளர் சிந்துஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போலீசார் தேடுவதை அறிந்த ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் மோகன் தலைமறைவாகி உள்ளார். ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டம் ஆத்துபாக்கம் பெண் ஊராட்சி மன்ற தலைவர் அவமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது தெற்கு திட்டை பஞ்சாயத்து தலைவர் தலித் என்பதால் அவர் அவமதிக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து திமுக மகளிர் அணி செயலாளரும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளார். சென்ன விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இது குறித்து தெரிவித்துள்ளதாவது:- 

ஊராட்சி மன்ற தலைவராக உள்ள பட்டியலினத்தவர்களுக்கு இருக்கை தராமல் அவமதித்தது நிச்சயமாக வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற சம்பவங்கள் தொடர கூடாது. இது போன்ற செயலில் ஈடுப்படுபவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதி ஆணவம் என்பது மிகப்பெரிய முட்டாளதனம் என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். திராவிட இயக்கமும் தந்தை பெரியாரும் திமுகவும் இதை எதிர்த்து தான் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. இப்படிப்பட்ட மனபான்மையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.