தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதற்காக திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தன. நாம் தமிழர் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குசேகரித்தார்.

அவர் பேசிய கூட்டங்களில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை சம்பந்தமாக சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தமிழக அரசியலில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். காங்கிரஸ் சார்பாக சீமான் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வழக்கு சீமான் மீது கொடுக்கப்பட்டிருக்கிறது. ராஜீவ் காந்தி கொலை குறித்து அவதூறாக பேசியதாக நெல்லை மாவட்டம் மேலநீலிதநல்லூர் காங்கிரஸ் கட்சி சார்பாக சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே தமிழக அமைச்சர்களை திருடர்கள் என்று விமர்சித்ததற்காக சீமான் மீது தூத்துக்குடி காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.