கை கால ஒடச்சிடுவேன்.. ஆபாச வார்த்தைகளால் திட்டிய ஆளுங்கட்சி எம்எல்ஏ.. சிக்கலில் எஸ்.ஆர்.ராஜா.. போலீஸ் அதிரடி.!
நிலத்தின் உரிமையாளர் பூஜா கோயல் தாம்பரம் திமுக எம்எல்ஏ ராஜாவுடன் சென்று அந்த நிறுவனத்தின் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதில், இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் எம்எல்ஏ ராஜா அந்த நிறுவனத்தின் அதிகாரிகளை கை கால்களை உடைத்து விடுவேன் என மிரட்டல் விடுத்து, ஆபாச வார்த்தைகளால் பேசிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தனியார் நிறுவனத்திற்குள் புகுந்து மிரட்டல் விடுத்த வீடியோ காட்சிகள் வைரலானது அடுத்து அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் மறைமலைநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் மெல்ரோசாபுரத்தில் பூஜா கோயல் என்பவருக்கு சொந்த இடத்தில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் டேஜங்மோபாட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்நிலையில், நிலத்தின் உரிமையாளர் பூஜா கோயல் தனியார் நிறுவனத்தை வெளியேறுமாறு கூறியுள்ளார். ஆனால், அந்த நிறுவனம் குத்தகை காலம் முடிவடையும் முன் தங்களால் வெளியேற முடியாது என மறுப்பு தெரிவித்தனர்.
இதனிடையே நிலத்தின் உரிமையாளர் பூஜா கோயல் தாம்பரம் திமுக எம்எல்ஏ ராஜாவுடன் சென்று அந்த நிறுவனத்தின் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதில், இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் எம்எல்ஏ ராஜா அந்த நிறுவனத்தின் அதிகாரிகளை கை கால்களை உடைத்து விடுவேன் என மிரட்டல் விடுத்து, ஆபாச வார்த்தைகளால் பேசிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இந்த வீடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்ததா? அல்லது திமுக ஆட்சியால் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்ததா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் இந்த இரண்டில் மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் எது என்று தனக்கு ஆச்சர்யமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி அளித்த புகாரின் பேரில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா மீது ஆபாசமாக திட்டுதல், அத்துமீறி தனியார் நிறுவனத்தில் உள்ளே நுழைதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.