தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் தாக்கல் செய்த வழக்கு மீது சென்னை உயர் நீதிமன்றம் அக்டோபர் 16ஆம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ளது.


கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பாக தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி படு தோல்வியடைந்தாலும் தேனி தொகுதியில் மட்டும் அக்கட்சியின் வேட்பாளர் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி தேனி தொகுதியின் வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். தேனி தொகுதியில் ரவீந்திரநாத் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்தார். அதற்கான வீடியோ ஆதாரங்கள் இருந்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரதுஷ்பிரயோகம் செய்து முறைகேடாக ரவீந்தரநாத் வெற்றி பெற்றுள்ளார். எனவே, அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுதாரர் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கும், அதிமுக எம்பி ரவீந்திரநாத் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், ரவீந்திரநாத் பதில் மனுத்தாக்கல் செய்யாமல் இருந்தார். இந்த வழக்கு மீது பலகட்ட விசாரணை நடைபெற்று வந்ததற்கிடையே, தன் மீதான வழக்கை நிராகரிக்கக் கோரி ரவீந்திரநாத் தனியாக ஒரு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், தன் மீதான வழக்கை நிராகரிக்கக் கோரி ரவீந்திரநாத் தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், அக்டோபர் 16ஆம் தேதி வழங்கவுள்ளது.