சி.ஆர்.சரஸ்வதி மீது  வழக்கு…ஐகோர்ட் வக்கீல் பேட்டி…

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதா மரணத்தில் தனக்கும் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலை தோண்டி எடுத்தால் தான் உண்மை நிலவரம் தெரிய வருமோ என்று கருத்து தெரிவித்தார்.

நீதிபதியின் இந்த கருத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி நீதிபதி ஒருவர் தனிப்பட்ட கருத்தாக இப்படி கூறியது அ.தி.மு.க.வில் உள்ள ஒன்றரைக்  கோடி தொண்டர்களின் மனதைப் புண்படுத்துவதாக உள்ளது என தெரிவித்தார்.

நான் இப்படி கருத்து சொல்வது நீதிமன்ற அவமதிப்பாக கூட இருந்தாலும் நீதிபதி வைத்தியநாதன் இப்படி கூறியதை ஏற்க முடியவில்லை என்றும் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்தார்.

சி.ஆர்.சரஸ்வதியின் இந்த கருத்துக்கு ஐகோர்ட் வக்கீல்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொதுவாக நீதிமன்றத்தில் எந்த வழக்கு விசாரணைக்கு வந்தாலும் நீதிபதிகள்  முன்பு வக்கீல் வாதம் நடைபெறும்.

அப்போது மூத்த நீதிபதிகள் கருத்து சொல்வது வழக்கம். அப்போதுதான் சம்பந்தப்பட்ட வழக்கில் தெளிவு கிடைக்கும். இது போன்றுதான் நீதிபதி வைத்தியநாதனும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதற்கு சி.ஆர்.சரஸ்வதி வெளியிட்டுள்ள கருத்து மிரட்டல் விடுவதைப் போல் உள்ளது. இது நீதிமன்றத்துக்கே சவால் விடுவது போல் உள்ளது என்றும் இது தொடர்பாக  சி.ஆர்.சரஸ்வதி மீது வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்தனர் அதேநேரத்தில், நீதிபதியே கூட தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கலாம் என்றும் கூறினர்.