‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ என்று பேசிய மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் மீது டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இந்து சேனா அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
அரவக்குறிச்சி தொகுதியில் மநீம வேட்பாளரை ஆதரித்து அக்கட்சித் தலைவர் பேசினார். அப்போது, “காந்தி சிலை முன்பு நின்று கொண்டு இதைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. காந்தியின் கொள்ளுப் பேரனான நான், அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன்” என்று பேசினார். கமலின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாஜக, அதிமுக, சிவசேனா ஆகிய கட்சிகள் கமலின் பேச்சை கண்டித்தன. ஒற்றுமையைக் குலைக்க முயன்றதாக அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கமல்ஹாசனின் இந்த விமர்சனம் குறித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஹிந்து சேனா அமைப்பு கமல் மீது கிரிமனல் வழக்கைத் தொடர்ந்துள்ளது.

 
அதில், “தீவிரவாதத்தோடு இந்து மதத்தை தொடர்புப்படுத்தி கமல் பேசியிருக்கிறார். இதன் மூலம் இந்து மக்களின் மத உணர்வுகளை கமல்ஹாசன் காயப்படுத்தி விட்டார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை நாளைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.