நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சம்பந்தமாக சில கருத்துக்களை தெரிவித்தார். அது பலத்த சர்ச்சையை கிளப்பியது. பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். காங்கிரஸ் சார்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் சீமான் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. 

இதனிடையே தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சீமானுக்கு சம்மன் அளிக்கப்பட்டிருந்தது. இதற்காக கடந்த 16 ம் தேதி தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகை வந்திருந்த சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்துடன் அமைச்சர்களை ஒப்பிட்டு விமர்சித்திருந்தார். 

இதுகுறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த சுயம்பு என்பவர் தென்பாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் சீமான் அமைச்சர்களை திருடர்களுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 153 (ஏ) 505 1 (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.