வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடியுடன், பிரதமர் மோடியை ஒப்பிட்டு பேசி அவமதித்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் சலாப் மணி திரிபாதி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
உத்தரப்பிரதேச மாநிலம், தியோரியா மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் ஐபிசி பிரிவு 499, 500 ஆகிய பிரிவுகளில் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட இந்த வழக்கு, வரும் ஏப்ரல் 5-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கை தொடர்ந்த பாஜக மூத்த தலைவர் சலாப் மணி திரிபாதி இதுதொடர்பாக பேசியபோது, சமீபத்தில் டெல்லியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, வங்கி மோசடியில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பி ஓடிய வைர வியாபாரி நீரவ் மோடி, ஐபிஎல் தலைவர் லலித் மோடி ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு பேசியுள்ளார்.

மோடி என்ற பெயர் உடையவர்கள் அனைவரும் ஊழலோடு தொடர்புடையவர்கள் என்று ராகுல் கூறியுள்ளார். ராகுல் காந்தியின் வார்த்தைகள், பாஜக தொண்டர்களையும், நாட்டு மக்களின் உணர்வுகளையும் பாதித்துவிட்டது. இதன் காரணமாக, தியோரியா நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டதாக தெரிவித்தார்.