case filed against edappadi in high court

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவின் ஆலோசனைப்படி தமிழகத்தில் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் 4 அமைச்சர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மறைந்த தாமரைக்கனியின் மகனும், ஓபிஎஸ் அணி பிரமுகருமான ஆணழகன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அதில் கடந்த மாதம் 22 ஆம் தேதி அதிமுக செய்தித் தொடர்பாளர் கௌரி சங்கர் என்பவர், ஒரு தொலைக்காட்சி விவாதத்தின்போது, சிறையில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் ஆலோசனை மற்றும் உத்தரவுப்படிதான் தமிழக அரசு வழிநடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர்கள் திண்டுக்கல்சீனிவாசன்,செங்கோட்டையன்,செல்லூர் ராஜு, காமராஜ் ஆகியோர், பெங்களூரில் உள்ள சசிகலாவை சந்தித்து அரசின் செயல்பாடுகள் குறித்து விவாதித்ததாக அவர்களே தெரிவித்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் இந்த செயல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 188 ஆவது பிரிவின்படி, அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொள்ளும்போது எடுத்த ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய செயல் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்களின் இந்த செயல்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை,எனவே அவரும் அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறும் விதமாக செயல்படுகிறார் என தெரிவித்துள்ளார்.

எனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் 4 அமைச்சர்களையும் உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மனுவில் ஆணழகன் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.