இந்து கோயில்களை அவமதித்து பேசிய விவகாரம் தொடர்பாக புதுவை ஒதியஞ்சாலை போலீசார் திருமாவளவன் மீது மத அவமதிப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கடந்த நவம்பர் மாதம் புதுவை கம்பன் கலை அரங்கத்தில் நடந்த விடுதலை சிறுத்தைகள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூம்பாக இருந்தால் அது மசூதி, உயர்ந்த கட்டடங்களாக இருந்தால் அது தேவாலயம், அசிங்கமான, ஆபாசமான சிலைகள் இருந்தால் அது கோயில் என பேசினார்.  இந்து தெய்வங்களைப்பற்றி சில கருத்துக்களை தெரிவித்தார். இது, இந்து கோவில்களையும், தெய்வங்களையும் அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும், இந்து மத உணர்வை புண்படுத்துவதாகவும் கூறி இந்து முன்னணி பொதுச்செயலாளர் டி.என். கண்ணன் பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருமாவளவன் பேசிய இடம் புதுவை என்பதால் பெரம்பலூர் போலீசார் பின்னர் அந்த வழக்கை தமிழக டி.ஜி.பி. மூலமாக புதுவை போலீசுக்கு மாற்றினார்கள்.

அதன் அடிப்படையில் புதுவை ஒதியஞ்சாலை போலீசார் திருமாவளவன் மீது மத அவமதிப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.