எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவை பொதுச்செயலரான தீபாவின் கார் டிரைவர் ராஜா மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளது மிகப்பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.  

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், போட்டியிட முடியாத வகையில், சிலர் சதி செய்தது போல, இந்த தேர்தலிலும் சதி செய்து விடக்கூடாது என்பதில், ரொம்பவே உஷாராக இருக்கிறார் தீபா. மக்களவை தேர்தலிலும், இடைத்தேர்தலிலும், இம்முறை தீபா பேரவை, அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது.

 

அதிமுக, - திமுக, கூட்டணிக்கு மாற்றாக அறிக்கை மூலம், 'மெகா' கூட்டணியை அமைக்க பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதில், 'எங்களுடன் இணைந்து, கூட்டணியாக போட்டியிடுவதற்கு ஆர்வமுள்ள, ஒருமித்த கருத்துடைய அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன். ஆர்வமுள்ள கட்சிகள், துணை பொதுச்செயலரான மாதவனை, நேரில் தொடர்பு கொள்ள வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தீபாவின் ஏக்கத்தை உணர்ந்து கொண்ட அவரது கார் டிரைவர் ராஜா தீபா பேரவை சார்பாக தேர்தலில் களமிறங்க விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தனது கணவர் மாதவனைவிட கட்சி விவகாரங்களில் தீபா, டிரைவர் ராஜாவை அதிகம் நம்புவதாகவும், முக்கிய ஆலோசனைகள் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனது கட்சி தனித்து போட்டி என்று அறிவித்த தீபா, அதற்கான விருப்பமனுக்களையும் பெற்று வருகிறார். முதல் நாளே சுமார் 100 பேர் விருப்பமனுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் விருப்பமனுவை பெற்ற டிரைவர் ராஜா, தனக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கும்படி தீபாவிடமும் அவரது கணவர் மாதவனிடமும் விருப்பம் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதியில் போட்டியிட டிரைவர் ராஜா முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.