அரியலூர் அருகே கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முன்னாள் எம்எல்ஏவின் மகன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த ராமதேவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன். இவர் 2006-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் சார்பில் போட்டியிட்டு ஜெயங்கொண்டம்  எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். அப்போது, ஆட்சியை, திமுக கைப்பற்றியதால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனக் கூறி திமுகவில் இணைந்தார். இவரது மகன் ராஜ்கமல் (30). இவருக்குத் திருமணமாகி சுமார் 2 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லை. இவர், தனது வயல்பகுதியில் மீன் பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்று அதிகாலை ராஜ்கமல் தனது காரில் பண்ணையிலிருந்து தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. விபத்தில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.  

இதை கண்ட பொதுமக்கள் உடனே ராஜ்கமலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.