சேலம் அருகே அரசு விழாவிற்கு வந்த கள்ளக்குறிச்சி எம்.பி. காமராஜ் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த அதிமுக எம்.பி. காமராஜ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நேற்று விழுப்புரம் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக எம்பி சு.ராஜேந்திரன் (56).  தைலாபுரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று முன்தினம் அளித்த விருந்தில் இவர் கலந்து கொண்டார். விருந்து முடிந்ததும் முதல்வரை வழியனுப்பிவிட்டு திண்டிவனம் ஜக்காம்பேட்டையில் உள்ள விருந்தினர் மாளிகையில் ராஜேந்திரன் தங்கினார். 

நேற்று காலை 6.30 மணியளவில் சென்னைக்கு காரில் புறப்பட்டு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம் மயிலம் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் அமைக்கப்பட்டு வரும் தடுப்பில் மோதி கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே எம்பி ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதல்வர், துணைமுதல்வர் அஞ்சலி செலுத்தினர்.

 

இந்நிலையில் இன்று அரசு விழாவிற்கு பங்கேற்பதற்காக கள்ளக்குறிச்சியில் இருந்து சேலத்திற்கு காரில் அதிமுக எம்.பி. காமராஜ் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது வாழப்பாடி அருகே வந்துக்கொண்டிருந்த போது திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி  தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த அதிமுக எம்.பி.காமராஜ் மற்றும் ஓட்டுநர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தடுத்து அதிமுக நிர்வாகிகள் விபத்தில் சிக்குவது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.