தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது.  உடல் நலக்குறைவு காரணமாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை. இதேபோல அவருடைய மகன் விஜய பிரபாகரன், கட்சியின் துணை பொதுச்செயலாளர் எல்.கே. சுதிஷ் ஆகியோரும் போட்டியிடவில்லை. விஜயகாந்தின்  மனைவியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார். எனவே, அந்தத் தொகுதியிலேயே பெரும்பாலும் பிரேமலதா பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
எல்.கே. சுதிஷுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேலமதாவுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. எனவே, தேமுதிக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர்கள் பிரசாரம் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. விஜயகாந்த் இறுதிகட்டத்தில் பிரசாரம் செய்வார் என்று பிரேமலதா ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் விஜயகாந்த் இன்று பிரசாரத்தைத் தொடங்கினார்.
கும்மிடிப்பூண்டி தேமுதிக வேட்பாளர் டில்லியை ஆதரித்து பஜார் சாலையில் பிரச்சாரம் செய்தார். தேர்தல் பிரசார வேனில் ஏறி நின்றுகொண்டு வாக்காளர்களை நோக்கி கைகூப்பி வணங்கியும் கைகளை அசைத்தும் விஜயகாந்த் வாக்கு சேகரித்தார். விஜயகாந்தைக் கண்ட தொண்டர்கள் விசிலடித்து கரவொலி எழுப்பினர். நீண்ட நாள் கழித்து விஜயகாந்தைக் கண்டதால் பொதுமக்களும் ஆவலுடன் அவரைப் பார்த்து கையசைத்தனர்.