தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முடிவுக்கு வந்துள்ளார்.
 தே.மு.தி.க ஒரு காலத்தில் ஓகோ என்று இருந்ததற்கும் தற்போது பின்னடைவை சந்தித்து இருப்பதற்கும் ஒரே காரணம் பிரேமலதா மட்டுமே என்பது அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரியும். 2011 தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி என்கிற முடிவை விஜயகாந்தை எடுக்க வைத்ததும் பிரேமலதா தான், 2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடன் இணையும் முடிவை உறுதி செய்ததும் பிரேமலதா தான். கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க ரத்தினக்கம்பளம் விரித்தும் விஜயகாந்த் வைகோவை நம்பி மக்கள் நலக் கூட்டணியில் இணைந்ததற்கும் காரணம் பிரேமலதா விஜயகாந்த் தான்.  இந்த அளவிற்கு தே.மு.தி.கவில் பவர் புல்லாக இருந்தாலும் இது நாள் வரை பிரேமலதா நேரடியாக தேர்தல் அரசியலில் ஈடுபட்டது இல்லை. தேர்தல் சமயங்களில் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்வதோடு ஒதுங்கிக் கொள்வார். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. 

தே.மு.தி.கவின் செல்வாக்கு அதள பாதாளத்தில் இருக்கிறது. இந்த நிலையை மாற்ற கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டியுள்ளது. விஜயகாந்திற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் கட்சியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பிரேமலதாவிடமே இருக்கிறது.  இதனை உணர்ந்தே பிரேமலதா அரசியல் ரீதியாக காய்களை நகர்த்தி வருகிறார். தே.மு.தி.க வேட்பாளர்களுக்காக பிரேமலதா பிரச்சாரம் மேற்கொண்ட போதே அவரது பேச்சு பலராலும் கவனிக்கப்பட்டது. 2016 சட்டமன்ற தேர்தலின் போது விஜயகாந்த் பிரச்சாரத்தை விட பிரேமலதா பிரச்சாரம் தான் அதிகம் பேசப்பட்டது. ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து பேசியதால் பிரேமலதா மீது வழக்குகள் எல்லாம் கூட போடப்பட்டன.  அந்த வகையில் பேச்சாற்றல் உள்ளவர் என்பதால் தே.மு.தி.க தொண்டர்கள் தற்போது பிரேமலதாவை நம்பத் தொடங்கியுள்ளனர். அண்ணியார் கட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும், தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நேரடியாகவே பேசத் தொடங்கியுள்ளனர். ஆனால் தனது கணவர் தலைவர் பதவியில் இருப்பதால் கட்சிப் பதவி தனக்கு தேவையில்லை என்பதில் பிரேமலதா உறுதியாக உள்ளார். ஆனால் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்கிற முடிவுக்கு அவர் வந்துவிட்டார்.

 வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம் என்று கூட பிரேமலதா நினைத்துக் கொண்டிருந்தார், ஆனால் அதைக்காட்டிலும் சட்டமன்ற தேர்தலில் களம் இறங்குவது தான் சரியாக இருக்கும் என்று அவர் நினைக்கிறார். இதனால் விஜயகாந்த் முதல் முறையாக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தனியாக களம் இறங்கி வெற்றி கண்ட விருதாச்சலம் தொகுதியில் போட்டியிடலாம் என்று பிரேமலதா திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கான பணிகளை தற்போதே தொடங்குமாறு அங்குள்ள கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  நாடாளுமன்ற தேர்தலை விஜயகாந்தை முன்வைத்து தே.மு.தி.க சந்தித்தாலும் சட்டமன்ற தேர்தலின் போது தே.மு.தி.கவின் முகமாக பிரேமலதாவே இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.