அரசியல் மாற்றம் என்ற எனது நீண்ட நாள் கனவு கனவாகவே போகுமா என பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்கள் மத்தியில் வேதனையுடன் பேசியுள்ளார். 

பாமக பொதுக் குழு கூட்டம் அதன் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இணைய வழியில் இன்று நடைபெற்றது. பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

அப்போது ராமதாஸ் பேசுகையில்;- பாமகவை ஆரம்பித்து 31 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இன்று நம்மிடம் ஒரு சட்டமன்ற உறுப்பினர், மக்களவை உறுப்பினர் கூட இல்லை. கட்சி தொடங்கிய நான்கு மாதங்களில் நடந்த மக்களவைத் தேர்தலில் 6.5 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றோம். ஆனால், இப்போது 5.6 சதவிகிதம் என்ற அளவில் நம் வாக்கு வங்கி இருக்கிறதென சுட்டிக்காட்டினார்.

உங்களை சரியாக வழிநடத்தத் தவறிவிட்டதுதான் இதற்கு காரணமோ என்று கூட நான் சில சமயங்களில் நினைப்பது உண்டு. அனைத்து விதத்திலும் பயிற்சி கொடுத்துவிட்டேன். அப்படி என்றால் கோளாறு நிர்வாகிகளாகிய உங்களிடம்தான் இருக்கிறது. அன்புமணி 2016 தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் தோல்வியடைந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் தோற்றார். இதற்குக் காரணம் நீங்கள்தான். நிர்வாகிகள் சரிவர தேர்தல் பணியாற்றாததுதான் என்று குற்றம்சாட்டினார்.

தேர்தலில் தனியாக நின்று 25 தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால் ஏன் கட்சி நடத்த வேண்டும்? அரசியல் மாற்றம் என்ற எனது நீண்ட நாள் கனவு கனவாகவே போகுமோ? என்னுடைய வாழ்க்கையில் அரசியல் மாற்றத்தை காண முடியாதா? என உருக்கமாக பேசினார். மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கண்ணுக்குத் தெரியமால் தேர்தல் வேலைகளைச் செய்வார்கள். அந்த அமைப்பை போல் பாமகவினர் திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்  என தெரிவித்துள்ளார்.