சட்டமன்ற தேர்தலுக்கான களப்பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கி விட்டன. கூட்டணி பேச்சுவார்த்தைகள், கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவது, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அரசியல் களத்தில் அரங்கேறி வருகிறது.

ஆளும் கட்சியான அதிமுகவை பொறுத்தவரை தேர்தல் வெற்றிகளை தாண்டி முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை தீவிரமான நிலையில், அதற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அதிமுக அறிவித்ததில் இருந்தே முன்னுக்குபின் முரணான கருத்துகளை தமிழக பாஜக கூறி வருகிறது.

இந்த நிலையில், விவசாயிகள் சம்மேளன நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அரசியல் நிலவரங்கள் குறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவரிடம், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை பாஜக ஏற்றுக் கொண்டதா என்ற கேள்வியை செய்தியாளர்கள் முன் வைத்தனர். ஆனால், அந்த கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்க மறுப்பு தெரிவித்து விட்டார்.

சில தினங்களுக்கு முன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சி மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்த நிலையில், பிரகாஷ் ஜவடேகர் அதுதொடர்பான கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க பாஜக மேலிடம் தயக்கம் காட்டுகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

முன்னதாக, எடப்பாடி பழனிசாமியின் பாஜகவுக்கு எதிரான நடவடிக்கைகளால், அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறுமா என்ற கேள்விகள் அரசியல் அரங்கில் பேசு பொருளாகியது. ஆனால், சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடரும் என நம்பிக்கை இருக்கிறது. அதிமுக ஆட்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்” என்று மறைமுகமாக கூட்டணியை உறுதி படுத்தினார்.