பள்ளிகளில் அடுத்தாண்டு பொதுத்தேர்வு நடக்குமா? ரத்தாகுமா? என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.  

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் வளாகத்தில் 2 கோடி மதிப்பிலான புதிய வேளாண்மை விரிவாக்க கட்டடப் பணி மற்றும் 172 பயனாளர்களுக்கு ஆடு மற்றும் மாடு கொட்டகை கட்டுவதற்கான ஆணையை பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- வெளிநாடுகளில் இருந்து புதிய வகை வைரஸ் வருவதாக கூறினாலும், கோயில்கள்  திறக்கப்பட்டு வழிபாடு நடத்த அரசு அனுமதித்துள்ளது. அரசுப் பள்ளியில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது என்றும் அரசு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முதல்வரிடம் பேசி நல்ல முடிவெடுக்கப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கொரோனா தொற்று ஏற்பட்டதாலும், ஊரடங்கு  காரணமாகவும் கடந்த ஆண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வை வைத்து தேர்ச்சி  அறிவிக்கப்பட்டது. இந்தாண்டு நிலைமை வேறு. தமிழகத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் 405 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதால், மாணவர்களுக்கு கூடுதலாக மருத்துவம் படிக்க இடம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.