சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கன்னடர் சூரப்பாவை நியமனம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் சூரப்பா நியமனத்தை வேடிக்கைப் பார்க்கும் தமிழக அரசு பதவி விலக வலியுறுத்தியும் பாமகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன போராட்டம் நடத்தி வருகின்றனர்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா என்பவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்தார்.

துணை வேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்டதற்கு தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தொல் திருமாவளவன், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலர், சூரப்பா நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

மர்மமான முறையில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக குற்றம்
சாட்டப்படுகிறது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்ட சூரப்பாவை நியமனம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி பாமகவினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்

சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், ஜி.கே.மணி மற்றும் பாமக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, சூரப்பா நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். சூரப்பா நியமனத்தை வேடிக்கைப் பார்க்கும் தமிழக அரசு, உடனே பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.