மதுரையில் கால்வாய் உடைப்புக்கு எலி, காட்டுப்பன்றி காரணம் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.


வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட நீர் நிலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பாசன கால்வாய்த் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் உசிலம்பட்டி சுற்றுவட்டார கிராமங்களுக்கா 58-ம் கால்வாய் கட்டப்பட்டது. சுமார் 18 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த பணி சென்ற ஆண்டு முடிவுற்றது.  கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்டமும் நடந்தது. இத்திட்டத்துக்கு 33 கிமீ தொலைவில் கால்வாய் கரைகள்  மண்ணாலே அமைக்கப்பட்டது.


இந்தக் கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், கடந்த 5-ம் தேதி நொடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறக்கப்பட்டு ஒரே நாளில் டி.புதூர் கிராமம் வழியாக செல்லக்கூடிய கால்வாயின் கரை உடைந்து தண்ணீர் விளை நிலங்களுக்குள் புகுந்தது. இதனால், பல ஏக்கர் பருத்தி சாகுபடி சேதமடைந்தது. இந்நிலையில் சேதமடைந்த கரைகளைச் செப்பனிடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் பணிகளைப் பார்வையிட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அந்தப் பகுதிக்கு வந்தார்.


பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். “கால்வாய் செல்லக்கூடிய பகுதிகளில் எலிகளும் காட்டுப்பன்றிகளும் அதிகம் உள்ளன. இவை துளையிட்டதாலே கரை சேதமடைந்துள்ளது. இனிமேல் கரை உடையாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்வோம்” என்று தெரிவித்தார். இந்தப் பேச்சைக் கேட்ட விவசாயிகள், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இன்னும் சில விவசாயிகள் தலையில் அடித்துக்கொண்டே அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டனர்.