Can you speak Hindi in Tamil Nadu asked sasi throor
ஐ.நா.சபையில் இந்தியை அலுவல் மொழியாக ஆக்கும் முயற்சிக்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வருங்காலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆனால், ஐ.நா.வில் அவரை இந்தியில் பேசும்படி ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
129 நாடுகள் ஆதரவு
ஐ.நா.வில் இந்தியை அலுவல் மொழியாக்கும் திட்டம் தொடர்பான கேள்விக்கு மக்களவையில் பதில் அளித்து பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது-
‘‘ஐ.நா. சபையின் விதிகளின்படி, இந்தியை அலுவல் மொழியாக்க 129 நாடுகளின் ஆதரவு அவசியமானது. இந்தியை அலுவல் மொழியாக்குவதற்கு தேவையான செலவை உறுப்பு நாடுகள் ஏற்க வேண்டும்.
சிறிய நாடுகள் தயக்கம்
ஐ.நா. சபையில் மெஜாரிட்டியை பெறுவதற்கு 129 நாடுகளின் ஆதரவை பெறுவது கடிமான பணி கிடையாது. ஆனால், அதற்கான செலவை எதிர்க்கொள்வதில்தான் பிரச்சினை உள்ளது.
செலவை ஏற்கும் விவகாரம் காரணமாக சிறிய நாடுகள் தயக்கம் காட்டுகின்றன. இதனால் இந்தி மொழியை அலுவல் மொழியாக்குவதில் இடையூறு காணப்படுகிறது. அந்த நாடுகளிடம் இது தொடர்பாக தொடர்ந்து பேசி வருகிறோம்’‘.
இவ்வாறு சுஷ்மா கூறினார்.
ரூ.400 கோடி ஆனாலும்
பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஒருவர் பேசுகையில் ஐ.நா.வில் இந்தியை அலுவல் மொழியாக்கும் திட்டத்திற்கு இந்தியா ரூ. 40 கோடி செலவு செய்ய வேண்டும் என்றார்.
அதற்கு சுஷ்மா சுவராஜ் பதில் அளிக்கையில், இந்திய அரசு இதற்காக ரூ. 400 கோடி கூட செலவு செய்ய தயாராக உள்ளது. ஆனால் ஐ.நா. சபை அதனை ஏற்றுக் கொள்ளாது என்றார்.
சசிதரூர் கடும் எதிர்ப்பு
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர், இந்தியை ஐ.நா. சபையில் அலுவல் மொழியாக்கும் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதுபோன்ற ஒரு முயற்சிக்கு என்ன அவசியம் வந்தது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தமிழ் பிரதமர்
‘‘வருங்காலத்தில் தமிழகத்தில் இருந்தோ அல்லது மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்தோ ஒருவர் பிரதமராகவே அல்லது வெளியுறவு அமைச்சராகவோ ஆனால், அவர்களை ஐ.நா.வில் இந்தியில் பேசும்படி நாம் ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்?’’ என்றும் அவர் கேட்டார்.
ஆட்சி மொழி அல்ல
சசிதரூர் மேலும் பேசுகையில், ‘‘இந்தி இந்தியாவில் தற்போது அலுவல் மொழியாகத்தான் இருந்து வருகிறது. இந்தி, இந்தியாவின் ஆட்சி மொழி அல்ல. தற்போது பிரதமரும், வெளியுறவு அமைச்சரும் இந்தி பேசுவதால் மொழி பெயர்ப்பு பிரச்சினை இல்லை.
ஆனால், மற்ற நாட்டவர்களை இந்தியில் பேசுவதற்காக பணம் செலுத்தும்படி கோருவது சிரமமானது. ஏனென்றால், இந்தியாவுக்கு வெளியே இந்தி பேசப்படுவது இல்லை’’ என்றார்.
மற்ற நாடுகளிலும்...
அதற்குப் பதில் அளித்த சுஷ்மா சுவராஜ், ‘‘ இந்தியாவில் மட்டும் அல்ல பிஜியிலும் இந்தி அலுவல் மொழியாக உள்ளது. மேலும் மொரீஷியஸ், டிரினிடாட், தொபாகோ போன்ற நாடுகளிலும் இந்தி பேசப்படுகிறது’’ என்றார்.
விவாதத்தின்போது சசிதரூர் மேலும் கூறுகையில், ‘‘ஐ.நா.வில் தற்போது 6 அலுவல் மொழிகள் உள்ளன. ஆனால், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய இரு மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்படும் மொழியாக இருந்து வருவதாக’’ குறிப்பிட்டார்.
