திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதியின் அப்ரோச் மக்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. மிகவும் பொறுமையாகவும், பொறுப்பாகவும், முகம் கோணாமல் தேர்ந்த தலைவருக்கு உண்டான குணத்துடன் மக்களை அவர் அணுகும் முறையால் மக்களிடையே நாளுக்கு நாள் செல்வாக்கை அதிகரித்து வருகிறது.

 

கிராம சபை கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வரும் அவர் வத்தலக்குண்டு பகுதியில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர்,  ’’நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகிறேன் என தெரிந்த உடனே என்னை விரும்பாதவர்கள், எனது வளர்ச்சியை பிடிக்காதவர்கள், குறிப்பாக அதிமுக, பாஜகவை சேர்ந்த நண்பர்கள், ‘ அதெப்படி அவர் போகலாம்.. எந்த பொறுப்பிலும், பதவியிலும் இல்லை. இவர் எப்படி மக்களை சந்திக்கப்போகலாம்’’ எனக் கேட்கிறார்கள். என்னவோ மக்களை சந்திப்பது பெரிய தேச துரோகம் மாதிரி அவர்கள் கேட்கிறார்கள். மக்களை சந்திக்க வேண்டுமானால் பொறுப்பில் இருக்கணும், பதவியில் இருக்கணும் என்பது போல் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். நான் கிராமத்தில் பேசுவது இது தான் முதன்முறை. என்னை பார்க்க நீங்கள் வரவில்லை.

நான் தான் உங்களை பார்க்க வந்திருக்கிறேன். நீங்கள் வந்திருப்பது என் மீதும், திமுக மீதும் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது.  விரைவில் ஆட்சி மாற்றம் வர இருக்கிறது. இப்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய தலைவர் முதலமைச்சராக பதவியேற்கப் போகிறார். எனவே நமது குறைகளை இவர்களிடம் தெரிவித்தால் நிறைவடையும் என்கிற நம்பிக்கை உங்களது முகத்தில் தெரிகிறது. நிலக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் நிறுத்தப்பட்டால் வெற்றி பெறுவார் என்கிற நம்பிக்கை உங்கள் மூலம் கிடைத்துள்ளது.

அதுவே உங்களது கோரிக்கையாகவும் இருக்கிறது என்பதை உங்கள் முகம் பார்த்து உணர முடிகிறது’’ என பேசிய அவர் மக்கள் கேட்ட கேள்விகளை உள்வாங்கிக் கொண்டு, தெளிவாக, மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் பேசியது கூட்டத்தில் கைதட்டல்களாக எதிரொலித்தது. அடுத்து பொதுமக்களின் குறைகளை அடிமட்டத்தில் இருந்து கேட்டுக் கொண்டு அதற்கு ‘’நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தக் கோரிக்கைகளை எல்லாம் நிவர்த்தி செய்ய முயற்சிப்போம்’’ எனக் கூறியதும் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறார். 

பேசி வைத்து வாசிக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் தெளிவாகவும் பிறர் ஏற்றுக் கொண்டு, நம்பிக்கை அளிக்கும் வகையிலும் உதயநிதி ஸ்டாலின் பேசி வருவது நாளுக்கு நாள் அவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. டி.டி.வி.தினகரன் போல பொறுமையாகவும், தெளிவாகவும் முகம் சுளிக்காமல் பதிலளித்து வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது.